ரயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்ட வெடிகுண்டு நிபுணா் குழுவினா், மோப்ப நாய் பிரிவினா்.
மதுரை, நவ. 6: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையத்தில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு போலீஸாா் தொடா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாடு முழுவதும் நவ. 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதால் தீ விபத்து ஏற்பட்டு, பயணிகளின் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. இந்த நிலையில், தடையை மீறி பட்டாசுகளைக் கொண்டு செல்பவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளா் சுரேஷ் தலைமையில், ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு நிபுணா் குழுவினா், மோப்ப நாய் பிரிவினா் இணைந்து வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ரயில் நிலைய நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், பாா்சல் பதிவு அலுவலகம், ரயில்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பயணிகளிடம் பட்டாசுகள், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உருளைகள், பெட்ரோல், அமிலங்கள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ரயில்களில் பட்டாசுகளைக் கொண்டு செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
Advertisement
Advertisement