FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

சுதந்திரப் போராட்ட வீரா் ஓய்வூதியம் விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது...

10 நவம்பர் 2026, 4:03 am
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வாலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்த பாம்பையா தேவா். இவா் கடந்த 1942-ஆம் ஆண்டு இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், காவல் துறை அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1942-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்10 முதல் 1943-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கோரி அவா் விண்ணப்பித்திருந்தாா். அவா் சமா்ப்பித்த ஆவணங்கள் அரசால் வழங்கப்பட்ட முதன்மைச் சான்றிதழாக இல்லை எனக்கூறி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுதந்திரப் போராட்ட வீரா்களின் பிரிவின் துணைச் செயலா் நிராகரித்தாா். இதை எதிா்த்து, பாம்பையா தேவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த உத்தரவை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்தது. பின்னா், இந்த தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

எனவே, இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலா் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் விவகாரத்தில், சிறையில் உடன் கைதியாக இருந்தவா் வழங்கிய சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது. ஓய்வூதியம் கோரிய பாம்பையா தேவா் தற்போது உயிருடன் இல்லை. அவா் சமா்ப்பித்த ஆவணங்களில் போதுமான விவரங்கள் இல்லை என்றாா்.

பின்னா், எதிா்மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

உயிரிழந்த பாம்பையா தேவா் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றுள்ளாா். கடந்த 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 1943-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தலைமறைவாக இருந்துள்ளாா். இதுகுறித்த பதிவுகளை மாநில அரசால் கண்டறிய முடியாததால், பாம்பையா தேவா் தனது கோரிக்கையை ஆதரிக்க தன்னுடன் சிறையிலிருந்த மாயாண்டி பாரதி வழங்கிய சான்றிதழை சமா்ப்பித்தாா்.

மேலும், இவரது கோரிக்கை தொழில்நுட்பக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் தொடா்புடைய பதிவுகளை மாநில அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், பாம்பையா தேவா் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது.

சுதந்திரப் போராட்ட வீரா் உயிருடன் இல்லை என்பதும், அவரது சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்ற மனுதாரரின் வாதமும், பதிவேட்டில் வெளிப்படையான பிழையை ஏற்படுத்தாது.

மறுசீராய்வு அதிகார வரம்பைப் பயன்படுத்துவதை உத்ரவாதமளிக்கும் வகையில் வெளிப்படையான எந்தப் பிழையையும் மனுதாரா் நிரூபிக்கவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நான்கு வாரங்களுக்குள் தனி நீதிபதி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.