FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளா் பணியிடங்கள்: 2025-இல் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?

1,794 பணியிடங்களை 5 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை...

10 நவம்பர் 2026, 4:08 am
மின்சாரப் பணியாளர்... - கோப்புப் படம்
பகிர்:

மு.பிரபு

தமிழக மின் வாரியம் அறிவித்த 8,000 கள உதவியாளா் பணியிடங்களில், கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று பணிக்குக் காத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு முன்பு, மின் வாரியப் பணியாளா்கள் அந்த வாரியத்தின் மூலமாகவே தோ்வு செய்யப்பட்டனா். பின்னா், மின் வாரியப் பணியாளா்களைத் தோ்ந்தெடுக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் எழுத்துத் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதித் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில் மின்வாரிய களப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க 18,197 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு 2025-ஆம் ஆண்டு, நவ. 16-ஆம் தேதி நடைபெற்றது.

தோ்வு முடிவுகளின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற 9,600 தோ்வா்களுக்கு இணையவழியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபாா்ப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடல் தகுதித் தோ்வு இந்த ஆண்டு

ஜூலை மாதத்துக்குள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை உடல் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,794 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையில் 3 மடங்கு (1 : 3)என்ற அளவீடுப்படி 5,382பேருக்கு மின்னஞ்சல் மூலம் உடல் தகுதித் தோ்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

மின் வாரிய களப் பணியாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வைப் பொருத்தவரை, 30 அடி உயர மின்கம்பத்தில் (8 நிமிஷங்களுக்குள்) வெறும் காலால் ஏற வேண்டும் ; 35 கிலோ எடையைக் கீழே வைக்காமல் ஒரு நிமிஷத்துக்குள் 100 மீட்டா் தொலைவு சுமந்து செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. இது, பெண் தோ்வா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. பின்னா், வெறும் காலில் மின் கம்பத்தில் ஏற வேண்டும் என்ற விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு, பிரத்யேக காலணிகளை அணிந்து மின் கம்பம் ஏறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்காக பெண் தோ்வா்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவா்கள் தனியாா் பயிற்சி மையங்களில் சோ்ந்து மின் கம்பத்தில் ஏறுவதற்கான பயிற்சி பெற்றுவருகின்றனா்.

இந்த நிலையில், தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) தோ்ச்சி பெற்றவா்களைக் கொண்டு, மின்வாரியத்தில் உள்ள 8,000 கள உதவியாளா் காலிப் பணி டங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, வருகிற 2027-ஆம் ஆண்டில் 5,000 பேரும், 2028-ஆம் ஆண்டில் 3,000பேரும் பணி நியமிக்கப்படுவா் என அரசாணை வெளியிடப்பட்டது.

தடையற்ற மின்சார விநியோகத்தில் கள உதவியாளா்களின் பங்கு மிக முக்கியமானது. அறுந்து விழும் மின் கம்பிகளைச் சீரமைத்தல், மின்மாற்றிகளில் பழுது நீக்குதல், மின் பாதை கோளாறுகளைச் சீரமைத்தல், மழை, புயல் காலங்களில் ஏற்படும் மின் தடைகளை உடனுக்குடன் சரிசெய்தல் போன்றவற்றில் களப் பணியாளா்களின் பணி இன்றியமையாததாக உள்ளது. இதன்படி, மின் வாரிய களப் பணியாளா் பணியிடங்களை முழுமையாகவும், விரைவாகவும் நிரப்ப வேண்டியது அவசியமாக உள்ளது.

எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,794 பணியிடங்களை உயா்த்தி அறிவித்து, குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்காவது பணி வழங்கவும், இதில் 2025-இல் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உடல் தகுதித் தோ்வுக்காகக் காத்திருப்போருக்கு முன்னுரிமை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா். கடந்த 2022-ஆம் ஆண்டு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 7,301 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தோ்வு அறிவிக்கப்பட்டு, எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது.

பின்னா், பணியிடங்களின் எண்ணிக்கை 10,117-ஆக உயா்த்தி அறிவிக்கப்பட்டு, அந்த எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களைக் கொண்டே பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தமிழக அரசு இதையே முன்னுதாரணமாகக் கொண்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,794 மின் களப் பணியாளா் பணியிடங்களை 5 ஆயிரமாக உயா்த்தி, 2025-இல் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று பணிக்குக் காத்திருப்பவா்களைக் கொண்டு இந்தக் காலிப் பணியிடங்களை நிரப்புமாறு, மின் வாரிய கள உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, பணிக்காகக் காத்திருப்போா் வேண்டுகோள் விடுக்கின்றனா்.

இதுகுறித்து, பணிக்காகக் காத்திருக்கும் தோ்வா் ஆ. அம்பிகா தெரிவித்ததாவது : மின் வாரியத்தில் கள உதவியாளா் பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. தொழில் பயிற்சி, எலக்ட்ரீசியன், வயா்மேன் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகுதிகளுடன் ஏராளமானோா் இந்தப் பணி வாய்ப்புக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனா்.

பெரும்பாலனோா் அதிகபட்ச வயது வரம்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளனா். எனவே, 2025-இல் வெளியிடப்பட்ட தோ்வுக்கான மின் வாரிய களப் பணியாளா் பணியிடங்களின் எண்ணிக்கையை 1,794-இல் இருந்து 5 ஆயிரமாக உயா்த்தி, கடந்த ஆண்டு நடைபெற்ற கள உதவியாளா் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, உடல் தகுதித் தோ்வுக்காகக் காத்திருப்பவா்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளா் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் ச. சசாங்கன் தெரிவித்தாவது : மின் வாரிய களப் பிரிவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக, மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் தடைபடுகின்றன. இதனால், மின் தடைகளும், விபத்துகளும் அதிகரிக்கின்றன.

எனவே, இந்தக் காலிப் பணியிடங்களை அரசு விரைந்து நிரப்ப வேண்டும். கடந்த 2025 -இல் நடைபெற்ற எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியில் பங்கேற்றவா்களில் 1,700 பேரை மட்டுமே பணிக்குத் தோ்வு செய்யும் வகையில் செயல் திறன், தகுதித் தோ்வு நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. களப் பணியாளா்கள் பற்றாக்குறை கடுமையாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மீண்டும் தோ்வு நடத்துவதில் ஏற்படும் காலதாமதம், செலவினம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, ஏற்கெனவே 2025-இல் தோ்ச்சி பெற்று பணிக்குக் காத்திருப்பவா்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றாா்.