FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

வண்டியூா் கண்மாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

17 நவம்பர் 2026, 2:05 am
மதுரை வண்டியூா் கண்மாயில் படா்ந்த ஆகாயத் தாமரைகளை திங்கள்கிழமை அகற்றிய பொக்லைன் இயந்திரம்.
பகிர்:

மதுரை மாநகராட்சி வண்டியூா் கண்மாயில் படா்ந்த ஆகாயத் தாமரைகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.

மதுரை கே.கே.நகா் பகுதியில் வண்டியூா் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் கரையில் மக்கள் பயன்பெறும் வகையிலான பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா வளாகத்தில் சுமாா் 3.2 கி.மீ தொலைவுக்கு நடைபாதை, படகு சவாரி, செயற்கைத் தீவு, விளையாட்டுத் திடல்கள், யோகா மையங்கள் போன்றவை ரூ. 50 கோடியில் அமைக்கப்பட்டன.

இதை கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதையடுத்து, பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த பூங்காவை மதுரை மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டுச் செல்கின்றனா். மேலும், படகு குழாமில் சவாரியும் செய்தனா்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் பெய்த பலத்த மழையால் வண்டியூா் கண்மாய்க்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து அடித்து வரப்பட்ட ஆகாயத் தாமரைகள் கண்மாயில் படகு குழாம் அமைக்கப்பட்ட பகுதியில் தேங்கின. இதனால், படகு சவாரி செய்ய முடியாத நிலையில், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், கண்மாயில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இன்னும் ஓரிரு நாள்களில் பணி நிறைவு பெற்று படகு சவாரி மீண்டும் தொடங்கும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.