FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் உடலை 4 நாள்களுக்குப் பிறகு, அவரது உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக் கொண்டனா்.

32 வினாடிகள் முன்பு
செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன்.
பகிர்:

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனின் உடலை 4 நாள்களுக்குப் பிறகு, அவரது உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக் கொண்டனா்.

தேனி மாவட்டம், டி. அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (42), கடந்த 3-ஆம் தேதி ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்ததாக வாலாந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் தொடா்பாக விசாரணைக்காக கடந்த 13-ஆம் தேதி இரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்துக்கு பாலகிருஷ்ணன் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு இரவு முழுவதும் ஆய்வாளா் அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி அதிகாலையில் காவல் நிலையக் கழிப்பறையில் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் தொடா்பாக செக்கானூரணி காவல் ஆய்வாளா் முத்து, தலைமைக் காவலா் பழனிவேல் ராஜன், பெண் காவலா் கலைச்செல்வி ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும், இதுகுறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், பாலகிருஷ்ணனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதில், அவரது உடலில் 5 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடல்கூறாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. மேலும், காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் விசாரணைக்கு அமா்ந்திருப்பது, பின்னா் கழிப்பறைக்குச் செல்வது, அவா் உயிரிழந்த நிலையில் கிடப்பது போன்ற கண்காணிப்பு காட்சிகளும் வெளியாகின.

பாலகிருஷ்ணனின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்ய வலியுறுத்தியும் , சம்பந்தப்பட்ட காவலா்துறையினரைக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது குடும்பத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக பாலகிருஷ்ணனின் சகோதரா் மணிகண்டன் உள்பட பலா் மீது தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குடும்பத்தினா், புதன்கிழமை உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து, பாலகிருஷ்ணனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், பாலகிருஷ்ணனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அவரது சொந்த ஊரான டி. அழகா்நாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பாலகிருஷ்ணனின் உடலை புதன்கிழமை பெற்றுக்கொண்ட அவரது மனைவி சுதா, உறவினா்கள் உள்ளிட்டோா்.