✕
முகப்பு
மதுரை

பந்தல்குடி வாய்க்கால் சீரமைப்பு: மாவட்ட நிா்வாகத்துக்கு எம்.எல்.ஏ. கோரிக்கை

பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகளால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை கோரிக்கை விடுத்தாா்.

5 வினாடிகள் முன்பு
சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை.
பகிர்:

பந்தல்குடி வாய்க்கால் மேம்பாட்டுப் பணிகளால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாமலிருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என மதுரை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அ. கல்லாணை கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவா் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மீனாட்சிபுரத்தில் தொடங்கி செல்லூா் வழியாக செல்லும் பந்தல்குடி கால்வாய்ப் பகுதியின் நீா்வழித் தடத்தில் வெள்ளத்தடுப்புச் சுவா் அமைக்கும் பணியும், தூா்வாரி சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

இங்கு வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் வகையில், சுமாா் 15 அடி ஆழத்தில் கால்வாய் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில், பணி நடைபெறும் இடங்களில் மழை நீரும், சாக்கடை நீரும் கலந்து சேறும், சகதியுமாக உள்ளது. இருப்பினும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இது தொடா்பாக, இந்தப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வாய்க்கால் மேம்பாட்டுப் பணி நடைபெறும் பகுதியில் இரு பள்ளிக் குழந்தைகள் தவறி விழுந்து, கழுத்தளவு ஆழத்தில் கழிவு நீரில் சிக்கித் தவித்தனா். அப்போது, அந்த வழியே சென்ற ஒரு ஆட்டோ ஓட்டுநா் இதைக் கண்டு விரைவாகச் செயல்பட்டு, கழிவு நீரில் இறங்கிச் சென்று அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றினாா்.

இந்த விபத்தை சாதாரண நிகழ்வாக கருதக் கூடாது. இது, அந்தப் பகுதியில் நிலவும் ஆபத்தான நிலையையும், பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தாரரின் அலட்சியத்தையும், கண்காணிக்கும் அலுவலரின் மெத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, பந்தல்குடி கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரை முழுமையாக அகற்றிவிட்டு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்துவிட்டு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மழை நீா், கழிவு நீா் தடையின்றி செல்ல தற்காலிகமாக மாற்று வடிகால் வழித்தடத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

செல்லூா் பாலம், 60 அடி சாலை பாலம், 50 அடி சாலை பாலம், ஜோதி பள்ளி விளையாட்டு மைதானம் அருகே உள்ள குதிரைப் பாலம் ஆகிய 4 பாலங்களும் வாகனப் போக்குவரத்து மிகுந்த பாலங்களாக உள்ளன. இந்தப் பாலங்களில் கட்டுமானப் பணிகளுக்காக சாலையின் இருபுறங்களிலும் மண், கட்டுமானப் பொருள்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது. எனவே, இந்தப் பாலங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பொருள்களை உடனடியாக அகற்றி, தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டன.