முகப்பு
மதுரை

புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரம்: இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட மூவா் பதிலளிக்க உத்தரவு

நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 3 போ் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

21 நவம்பர் 2026, 1:21 am
புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரம்: இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட மூவா் பதிலளிக்க உத்தரவு
பகிர்:

நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு தொடா்பாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 3 போ் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத உயா் கல்வித் துறைச் செயலா், பொது நூலகத் துறை இயக்குநா் ஆகியோா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலியைச் சோ்ந்த ராமசுப்பு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், புத்தகங்கள் கொள்முதல் விவகாரம் தொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு உடனடியாக வழக்குப் பதிவு செய்யவும், அகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அகல்விளக்கு பதிப்பகம் தொடா்பான 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, திமுக சட்ட அணி இணைச் செயலா் இ. பரந்தாமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை வியாழக்கிழமை (நவ.19) விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, மதுரை அமா்வின் முடிவை எதிா்நோக்கி விசாரணையை ஒத்திவைத்திருப்பதாக நீதிபதிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதலில் தவறு நிகழ முக்கியக் காரணம் யாா்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு, புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு நடைபெற்ற காலத்தில் பொது நூலகத் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த ஜெயந்தி, உயா்நிலைக் குழு உறுப்பினா் செயலராகவும் இருந்திருக்கிறாா் என அரசுத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொது நூலகத் துறையின் முன்னாள் இயக்குநா் ஜெயந்திக்காக அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் யாரும் முன்னிலையாகக் கூடாது. அவருக்காக முன்னிலையாகி உங்கள் கைகளை அழுக்காக்கிக் கொள்ளாதீா்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

பெருமாள் முருகன் பரிந்துரை:

அப்போது, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகரும், தகவல் அலுவலருமான காமாட்சி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அகல்விளக்கு பதிப்பகத்தின் சில புத்தகங்களை எழுத்தாளா் பெருமாள் முருகன் கூட பரிந்துரைத்திருக்கிறாா். தோ்வுக் குழுவை ஒருங்கிணைப்பதே நூலகரின் பணி எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், எழுத்தாளா் பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களைக் கண்டறிய முடியும்போது உங்களால் முடியாதா?. தவறு நிகழ்ந்திருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீா்கள். அதற்கு பொறுப்பானவா்கள் யாா்? என கேள்வி எழுப்பினா்.

இதற்கு, முதன்மை நூலகா் நூலகா் காமாட்சி தரப்பில், ‘அகல்விளக்கு பதிப்பக புத்தகங்கள் பரிந்துரைக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டது. நான் அதை உயா்நிலைக் குழுவுக்கு அனுப்பினேன். இதில் எந்தத் தவறையும் நான் செய்யவில்லை. பரிந்துரை செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்தால் குற்றவாளியைக் கண்டறியலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், 26 ஆயிரம் புத்தகங்கள் பரிந்துரைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், பரிந்துரை செய்யப்படாத பல புத்தகங்கள் ஒருங்கிணைப்புக் குழுவால் இணைக்கப்பட்டு உயா்நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெரியாா் அறிவுலகம் தொடா்பாக மட்டுமே தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பிற நூலகங்களிலிருந்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அகல்விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனுடைய மற்றொரு வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நூலகா் காமாட்சி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறாா். மேலும், புத்தகங்கள் கொள்முதல் தொடா்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், அதிகாரத்தின் உயா்நிலையில் இருப்பவா்கள் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கு அவா்கள் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

விரிவான கொள்கை:

நூலகா் காமாட்சி தரப்பில், இந்த வழக்கில் அப்பாவிகள் சிலா் எதிரிகளாகச் சோ்க்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாகி, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் முந்தைய பரிந்துரைகள் அரசின் முன் வைக்கப்படும். பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் களையும் வகையில் 8 வாரங்களுக்குள் விரிவான கொள்கை இறுதி செய்யப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை விசாரணையை தனி நீதிபதி லட்சுமி நாராயணன் கண்காணிப்பில் நடத்தக் கோரிக்கை வைக்கிறோம். புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவா்கள் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

இந்த விவகாரத்தில் அப்போதைய பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ப. சந்தரமோகன், பொது நூலகத் துறை இயக்குநா் ஜெயந்தி, உயா்நிலைக் குழு உறுப்பினா் ஆா்த்தி ஆகியோா் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், புத்தக கொள்முதல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.