முகப்பு

பரபரக்கும் திருப்பரங்குன்றம்! தூணில் தீபம் ஏற்றுவது சாத்தியமா?

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் நோக்கி செல்வதைப் பற்றி...

பரபரக்கும் திருப்பரங்குன்றம்! தூணில் தீபம் ஏற்றுவது சாத்தியமா?
மதுரை திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம்.
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் நோக்கி செல்கிறது. உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்ற உத்தரவாக மாறியுள்ளது.

வழக்கமான தீபத்திற்கே ஏற்பாடு

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில் வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 4 அடி உயரமும், சுமார் 70 கிலோ எடையும் கொண்ட தாமிரக் கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்தக் கொப்பரையில் 400 லிட்டர் நெய் நிரப்பப்பட்டு, 150 மீட்டர் நீளமுள்ள காடா துணித் திரி மற்றும் 5 கிலோ சூடம் கொண்டு தீபம் ஏற்றப்படுகிறது. இவ்வளவு பெரிய தீபத்தை ஏற்றுவதற்கு ஏற்ற வகையில் அங்கு மண்டபமும், கொப்பரையை வைப்பதற்கான வசதிகளும் ஏற்கெனவே உள்ளன.

சர்ச்சைக்குரிய தூண் எப்படிப்பட்டது

சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அருகே அமைந்துள்ள கல் தூண் சுமார் 8 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்ட கிரானைட் கல் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண் தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டதா அல்லது நில அளவீட்டுக்கான சர்வே கல்லா என்பதில்தான் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.

தூணில் விளக்கேற்றுவதற்கான அமைப்பு இருப்பதால் அதைத் தீபத்தூணாகக் கருத வேண்டும் என்பது ஒரு தரப்பின் வாதம். மறுபுறம், அது சர்வே கல் என்றும், அங்கு தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றும் எதிர்த்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

திறந்தவெளி மலைப்பகுதி: காற்றும் பாதுகாப்பும் முக்கியம்

சர்ச்சைக்குரிய தூண் மலை உச்சியின் மேற்கு புறச் சரிவில் திறந்தவெளியில் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. கார்த்திகை மாதம் வடகிழக்குப் பருவமழைக் காலம் என்பதால் காற்றின் திசை, வேகம், மழை மற்றும் ஈரப்பதம் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மதுரை வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி நவம்பர் மாத சராசரி காற்றின் வேகம் மணிக்கு 5.5 கிலோமீட்டர். மலை உச்சியில் நிலவும் சூழலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தனியாக மதிப்பிடப்பட வேண்டியுள்ளன.

150 ஆண்டுகளாக தீபம் ஏற்றியதற்கான சான்று எங்கே?

கல் தூணில் இதற்கு முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதா என்பதும் விவாதத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. கடந்த 150 ஆண்டுகளாக அங்கு விளக்கேற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற வாதம் இருதரப்பு விவாதங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தூணில் கரித்தடம், எண்ணெய்த் தடம் உள்ளிட்ட பழைய தீப வழிபாட்டின் அடையாளங்கள் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இந்த விவகாரத்தில் நவ. 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நவ. 24 ஆம் தேதி சர்ச்சைக்குரிய கல் தூணில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகம் தேர்வு செய்யும் சிறிய குழுவினர் மட்டுமே அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அங்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்காலத்தில் நிரந்தர உரிமையாகவோ, அங்கு ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரமாகவோ கருத முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அனுமதி வழங்கியதில் முரண்பாடு

மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியும் வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முரண்பாடாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் நில அளவைத் தூணை தீபத்தூண் எனக் குறிப்பிட்டதற்கும், அந்த இடம் கோவிலுக்குச் சொந்தமானது எனக் கூறியதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தூண் எந்த வகையைச் சேர்ந்தது என்பது இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இந்த ஆண்டு மட்டும் அங்கு விளக்கேற்ற அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் ஆய்வறிக்கை சொல்வது என்ன?

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 484 சர்வே கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய கல்லும் சர்வே கல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்கெனவே நீதிமன்றம் வரை சென்றுள்ள தீப விவகாரத்தில் சர்வே கல் தொடர்பான விவாதம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மொத்தத்தில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மத நம்பிக்கையைக் கடந்து வரலாறு, தொல்லியல், நீதிமன்ற உத்தரவு, பொறியியல் மற்றும் பொதுப் பாதுகாப்பு எனப் பல்வேறு கோணங்களில் இந்த விவகாரம் விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் வழக்கமான தீபமே ஏற்றப்படுமா அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லிய தீர்ப்பின் அடிப்படையில் கல்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்பது பல்வேறு யுகங்களாக உள்ளது.

summary

A day before the Karthigai Deepam festival, Thiruparankundram and adjoining areas in Madurai were brought under a tight security ring. Police refused permissions for Hindu as well as Muslim outfits for processions and deployed more than 5,600 police personnel in Thiruparankundram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.