முகப்பு

திருப்பரங்குன்றம்: தூணில் இன்று தீபம் ஏற்றப்படுமா? பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திருப்பரங்குன்றம்: தூணில் இன்று தீபம் ஏற்றப்படுமா? என்பதைப் பற்றி...

திருப்பரங்குன்றம்: தூணில் இன்று தீபம் ஏற்றப்படுமா? பலத்த போலீஸ் பாதுகாப்பு!
திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம்.
பகிர்:

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் செவ்வாய்க்கிழமை (நவ. 24) திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபத் திருநாளன்று சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம. ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் நிறைவில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜன. 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழாண்டு கார்த்திகை தீப திருநாளன்று (நவ. 24) மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

விசாரணைக்கு வராத மறுஆய்வு மனு: உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் இணையவழியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்த அதே நீதிபதிகள் அமர்வில்தான் மறு ஆய்வு மனுவும் விசாரிக்கப்படுவது உச்சநீதிமன்ற மரபு என்ற நிலையில், நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வு திங்கள்கிழமை பணிப் பட்டியலில் இல்லை.

இதனால், தமிழக அரசின் மறு ஆய்வு மனு விசாரணைக்கு வரவில்லை. குருநானக் பிறந்த நாளையொட்டி (நவ. 24) உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால், அரசின் மறுஆய்வு மனு செவ்வாய்க்கிழமையும் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை.

இந்த நிலையில், தீப விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலையும் அரசு வெளியிடாததால், செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலை தூணில் ஏற்றப்படுமா அல்லது முந்தைய கால நடைமுறைகளே பின்பற்றப்படுமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

பலத்த பாதுகாப்பு: இதனிடையே, 5,000-க்கும் அதிகமான போலீஸார் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் நகர், கிரிவலப் பாதை பகுதிகள் முழுமையும் திங்கள்கிழமை காவல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 12 காவல் கண்காணிப்பாளர்கள், 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏ.டி.எஸ்.பி.), 57 உதவி ஆணையர்கள், 132 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மொத்தம் 5,618 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலை உச்சியில் தூண் அமைந்துள்ள பகுதியில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 உதவி ஆணையர்கள் தலைமையில் 187 போலீஸôரும், மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா பகுதியில் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 190 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விசுவநாதர் கோயில் பகுதியில் 320 போலீஸாரும், நெல்லித்தோப்பு, கிரிவலப் பாதை பகுதிகளில் 500-க்கும் அதிகமான போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு சோதனை: திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டு பாதை, தர்கா, மலை உச்சியில் உள்ள தூண் பகுதி, நெல்லித்தோப்பு, காசி விசுவநாதர் கோயில் பகுதி உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகள் கண்டறியும் சிறப்புப் பிரிவு போலீஸôர் திங்கள்கிழமை தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

தயார் நிலையில் கொப்பரை... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த நூற்றாண்டு கால வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட கொப்பரை தீபம் ஏற்றும் வல்லுநர் குழுவினரின் ஏற்பாட்டில் தீப கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுப்படி மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்காக கூடுதல் கொப்பரைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவலை கோயில் அலுவலர்கள் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

அமைக்கப்படாத குழு... திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த உத்தரவில் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. இதில், "தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்படும் தனிக் குழுவைக் கொண்டு மட்டுமே மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும். குழுவில் இடம்பெறுபவர்களை கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை, மதுரை காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், மலை தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழு திங்கள்கிழமை இரவு வரை அதிகாரபூர்வமாக அமைக்கப்படவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்கள் யாரும் திங்கள்கிழமை இரவு வரை மலை தூண் பகுதியை நேரில் ஆய்வு செய்யவும் இல்லை.

சட்ட நெருக்கடி... தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படாதால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவே தற்போதைய நிலையில் இறுதியானதாக உள்ளது. இதன்படி, திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.

இருப்பினும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு முன்வருமா? அல்லது கடந்த ஆண்டு இந்தத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இருமுறை பிறப்பித்த உத்தரவையும் அப்போதைய அரசு நிறைவேற்றாத நடைமுறையையே தவெக அரசும் கடைப்பிடிக்குமா? என்பது பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.