FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம்

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

19 நவம்பர் 2026, 6:01 am
உச்சநீதிமன்றம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் இரண்டாம் நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் முன்வைத்த வாதம்: திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபம் ஏற்றப்படும் தூண், தீபம் ஏற்றுவதற்கானதல்ல. அது ஒரு அளவீட்டுத் தூண். அத்தகைய ஏராளமான அளவீட்டுத் தூண்கள் உள்ளன. இந்த விவகாரத்தில், தொடர்புடைய தூணில் தீபம் ஏற்றலாம் என அளிக்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு மாற்றப்படாமல் அப்படியே நீடித்தால், இத்தகைய தூண்கள் அனைத்துக்கும் மதச்சாயம் பூசப்பட்டு, மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள் என்பதே மாநில அரசின் அச்சம். நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பித்தால் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான அளவீட்டு (கணக்கெடுப்பு) தூண்கள் மதரீதியானவையாக மாறத் தொடங்கும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "அந்த நிலத்தில் அரசுக்கு உரிமை உள்ளதா?' என வினவினர். அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, "அரசு அந்த நிலம் மீது உரிமை கோருவதாக நான் நினைக்கவில்லை. அந்தக் கேள்வியே எழவில்லை' என்று குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள்," அப்படியானால் அந்தத் தூண் குறித்து உங்கள் வாதத்தை எப்படி முன்வைக்க முடியும்? தனி நீதிபதியும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும், உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக இங்கே (தீபத் தூணில்) விளக்கு ஏற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனரே' எனக் கூறினர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், "எப்போதும் தீபம் ஏற்றப்பட்டு வருவது உச்சிப் பிள்ளையார் கோயிலில் மட்டுமே. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த நடைமுறைதான் உள்ளது' என பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து, தர்கா கமிட்டி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹுûஸஃபா அஹ்மதி,"நெல்லித்தோப்பு சற்று கீழே உள்ளது, மசூதி மேலே உள்ளது, மேலும் முழுப் பகுதியும் மசூதி மற்றும் தர்காவுக்கு சொந்தமானது. அந்த பகுதியில்தான் அவர்கள் கூறும் தீபத் தூண் உள்ளது' என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை மீண்டும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், வழக்கில் தொடர்புடைய எஞ்சிய தரப்பினர் மிக விரைவாகவும், சுருக்கமாகவும் தங்களது வாதங்களை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

பின்னணி: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்துக்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம.ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் அங்குள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகில், மலையின் உச்சியில் விளக்கு ஏற்றுவதாக சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரத்தில் தீபம் ஏற்றப்படும் இடம் தர்காவின் பகுதிக்கு வெளியே உள்ள கோயில் நிலம் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்து, தீபத்தூணில் தீபம் ஏற்றும் சடங்கை நடத்த அனுமதித்தார். ஆனால், சட்டம்-ஒழுங்கு கவலைகளைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் தனி நீதிபதி தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், "நவம்பர் 24' அன்று கார்த்திகை தீபம் பண்டிகை நெருங்கி வருவதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.