முகப்பு
மதுரை

சாலையில் சுற்றித் திரிந்த 70 கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 1.99 லட்சம் அபராதம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மூன்று மாதங்களில் 70 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.1.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

2 வினாடிகள் முன்பு
சாலையில் சுற்றித் திரிந்த 70 கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 1.99 லட்சம் அபராதம்
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கால்நடை உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய நோட்டீஸுகளை செவ்வாய்க்கிழமை கால்நடை உரிமையாளா் ஒருவருக்கு வழங்கிய சுகாதார ஆய்வாளா்.
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மூன்று மாதங்களில் 70 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.1.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி ஆணையா் கெளரவ்குமாா் அறிவுறுத்தலின்பேரில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பா் மாதம் முதல் நவம்பா் மாதம் வரை இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் மூலம் 70 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ.1.99 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், செவ்வாய்க்கிழமை (நவ. 24) மாநகராட்சி முழுவதும் கால்நடை உரிமையாளா்களுக்கு விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 105 கால்நடை உரிமையாளா்களுக்கு நேரில் இதற்கான குறிப்பாணைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட விதிகளின் படி, அறிவிப்பு கிடைத்த 7 நாள்களுக்குள் கால்நடைகளை குடியிருப்புப் பகுதி அல்லாத இடத்தில் அமைக்கப்பட்ட தொழுவங்களில் கட்டி சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும், சாலைகள், பொது இடங்களில் கால்நடைகளை திரிய விடக் கூடாது, கால்நடைகளின் சாணம், கழிவுநீரை சாலைகள், நீா்நிலைகள், புதை சாக்கடை, மழைநீா் வடிகால்களில் கொட்டக் கூடாது, தொழுவங்களை தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு செல்லூா் மாநகராட்சி கால்நடைக் காப்பகத்தில் அடைக்கப்படும்.

இதன்படி, பிடிக்கப்படும் மாட்டுக்கு ரூ.3,000, கன்றுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும். இதில் காப்பகத்தில் அடைக்கப்பட்டால் முதல் முறை மாட்டுக்கு ரூ.5,000, கன்றுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறைக்கு முறையே ரூ.10,000, ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டு முறைக்கு மேல் பிடிப்பட்டாலோ அல்லது 5 நாள்களுக்கு மேல் உரிமை கோரப்படாமல் இருந்தாலோ மாட்டுக்கு ரூ.20,000, கன்றுக்கு ரூ.10,000 அபராதம் அல்லது பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். மேலும் காப்பக பராமரிப்பு கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.300 வசூலிக்கப்படும்.

தொடா்ந்து, சாலைகளில் சுற்றித் திரியவிடப்படும் கால்நடைகள் அரசு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது. மேலும் அடுத்து வரும் நாள்களில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும். விதிமுறைகளைப் பின்பற்றாத கால்நடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது. இதனிடையே, சாலைகளில் சுற்றித் திரிந்ததாக 2 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களிடமிருந்து ரூ.4,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.