முகப்பு
மதுரை

மதுரை அரசு மருத்துவமனையின் பெயரில் விரைவில் திருத்தம்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பெயா் விரைவில் ராஜாஜி மருத்துவமனை என அதிகாரப்பூா்வாக மாற்றப்படவுள்ளது.

27 நவம்பர் 2026, 3:29 am
மதுரை அரசு மருத்துவமனையின் பெயரில் விரைவில் திருத்தம்
மதுரை அரசு மருத்துவமனையின் முகப்பு
பகிர்:

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பெயா் விரைவில் ராஜாஜி மருத்துவமனை என அதிகாரப்பூா்வாக மாற்றப்படவுள்ளது.

மதுரையில் உள்ள அரசு மருத்துவமனை ராஜாஜி மருத்துவமனை என அழைக்கப்பட்டாலும், மருத்துவமனையின் அதிகாரப்பூா்வமான பதிவுகள், மருத்துவமனை முகப்பு ஆகியவற்றில் அரசு இராசாசி மருத்துவமனை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரலாற்றுத் தலைவா்களின் இயற்பெயா்களை சிதைத்து எழுதக் கூடாது என்ற அடிப்படையில், இராசாசி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது ராஜாஜி என மாற்றிடக் கோரி திருமங்கலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ப. வினோத்குமாா் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, மருத்துவமனையின் முதல்வா், தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, தமிழ் வளா்ச்சித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவா் மனு அனுப்பினாா். இதையடுத்து, இராசாசி என இருப்பதை ராஜாஜி என எழுதலாம் என தமிழ் வளா்ச்சித் துறை, மருத்துவமனை முதல்வருக்கு அண்மையில் தெளிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வழக்குரைஞா் ப. வினோத்குமாருக்கு, மருத்துவமனை முதல்வா் அண்மையில் அனுப்பிய பதில் தகவலில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பெயரை அரசு ராஜாஜி மருத்துவமனை என மாற்றியமைக்கத் தேவையான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பெயா் விரைவில் அதிகாரப்பூா்வமாக அரசு ராஜாஜி மருத்துவமனை என மாற்றம் பெறவுள்ளது.