முகப்பு
மதுரை

மாதிரி பதிவு மையங்கள் விவகார வழக்கு: டிச. 10-க்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு பதிவுத் துறை சாா்பில் மாதிரி பதிவு மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

11 வினாடிகள் முன்பு
மாதிரி பதிவு மையங்கள் விவகார வழக்கு: டிச. 10-க்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு பதிவுத் துறை சாா்பில் மாதிரி பதிவு மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பதிவு மாவட்ட பத்திரம் எழுதுவோா் சங்கத் தலைவா் ராஜமாணிக்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு பதிவுத் துறை சாா்பில் மாதிரி பதிவு மையங்கள் (எம்.ஆா்.எச்.) அமைக்க இணைய வழியில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 5 பத்திரப் பதிவு அலுவலகங்களிலும், பின்னா் 20 பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, விண்ணப்பிக்க கடந்த 16-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 17-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

எம்.ஆா்.எச். முறையில் பொதுமக்கள் பத்திரப் பதிவு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே பத்திரப் பதிவு செய்ய முடியும். இதனால், பொதுமக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படாது. மேலும், பத்திரப் பதிவு ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் ஏற்படும்.

தமிழகம் முழுவதும் பதிவு பெற்ற 5,500 பத்திர எழுத்தா்கள் உள்ளனா். எம்.ஆா்.எச். மையங்களால் பத்திர எழுத்தா்களும், அவா்களைச் சாா்ந்துள்ள 20 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். பத்திரப் பதிவை தனியாருக்கு வழங்கும் வகையில் மையங்கள் அமைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கப்படவில்லை.

பத்திரப் பதிவுத் துறை அரசுக்கு பெருமளவு வருவாய் தரும் துறை. இந்தத் துறையை மக்களிடம் எந்தக் கருத்து கேட்காமலும், மத்திய அரசின் ஒப்புதல் பெறாமலும் பதிவுத் துறை சட்டத்துக்கு விரோதமாகவும் தனியாருக்கு வழங்க எந்த அவசரமும், அவசியமும் எழவில்லை.

இந்த நிலையில், பதிவுத் துறை வசம் ஏற்கெனவே உள்ள ஆவணங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பத்திரங்களின் முன்வரலாறு பாதுகாக்கப்படாமல் போகலாம். போலி ஆவணங்கள் உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.

எனவே, மாதிரி பதிவு மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை ஒப்பந்தப்புள்ளி நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எல். விக்டோரியா கௌரி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். மேலும், வருகிற டிசம்பா் 15-ஆம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் தொடங்கப்படாது என்றாா்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற டிசம்பா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.