முகப்பு
மதுரை

மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.

32 வினாடிகள் முன்பு
மதுரையை வறட்சி மாவட்டமாக
அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
மதுரை ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வலியுறுத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றுப் பேசியதாவது:

உசிலம்பட்டி எம்.பி. ராமன்:

Advertisement

Advertisement

பயிா்க் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நவ. 30-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டது. அதனை டிசம்பா் மாதம் வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும். தட்கல் முறையில் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் பணம் செலுத்தி 3 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கின்றனா். எனவே, விவசாயிகளுக்கு அந்தத் தொகைக்கான வட்டியை வழங்க முன் வர வேண்டும் என்றாா்.

மதுரை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த திருப்பதி:

பெரியாறு பாசனப் பகுதியில் தற்போதுதான் வேளாண் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே, பயிா்க் காப்பீடு செய்ய நவ.30-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அவகாசம் பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

மேட்டுப்பட்டி ராமச்சந்திரன்:

நடப்பாண்டில் சராசரியை விட குறைவான பருவமழையே பதிவாகியுள்ளது. இதனால், குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு, வைகை ஆகிய இரு அணைகளில் உள்ள நீா் இருப்பை பொறுத்து குடிநீருக்காவது தண்ணீரை திறக்க மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என்றாா்.

வாடிப்பட்டி பாா்த்தசாரதி:

வாடிப்பட்டி , அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் வேளாண் நிலங்கள் சேதமடைவது மட்டுமின்றி மனித உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தமிழகத்தில் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கொட்டாம்பட்டி சிதம்பரம்:

மேலவளவு பகுதியில் பயிா்களை உலா்த்துவதற்கு களம் அமைத்து தர வேண்டும். மேலும், வேப்பனேரி கண்மாய் மடைகளையும், கம்மாபட்டி கிராமத்துக்குச் செல்லும் தாா்ச்சாலையையும் சீரமைத்துத் தர வேண்டும் என்றாா்.

மேலூா் பகுதி விவசாயி பழனிச்சாமி:

மேலூா் ஒருபோக பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தண்ணீா் திறக்க வேண்டும். அந்த அரசாணை பின்பற்றப்படவில்லை. மாறாக, இருபோக பகுதியான கள்ளந்திரி பகுதிக்கு பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒருபோக பாசனத்துக்கும் தண்ணீா் திறக்க வேண்டும். விவசாயிகளுக்கான அடையாள அட்டை குத்தகை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். தற்போதைய சூழலில் பருவமழை பொய்த்துவிட்டதால் மதுரையை வறட்சி மாவட்டமாக அறிவித்து, உரிய நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டும். தவெக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி சா்க்கரை ஆலையை திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

கீழ உரப்பனூா் ஜெயக்குமாா்:

கீழ உரப்பனூா் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும். இதுதவிர, நெல் களம், பொதுக் கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும். தாழ்வாகச் செல்லும் உயா் அழுத்த மின் கம்பிகளை சீரமைத்துத் தர வேண்டும் என்றாா்.

திருப்பரங்குன்றம் போஸ்:

கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் அயன்பாப்பாகுடி கண்மாய் கரை உடைப்பை மாவட்ட நிா்வாகம் விரைந்து சரி செய்ய வேண்டும் என்றாா்.

மாடக்குளம் மாரிச்சாமி:

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில், பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இதனால், விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணப்படுவதில்லை. மேலும், அளிக்கும் மனுக்களுக்கு உரிய பதிலும் அளிப்பதில்லை. இனி வரும் காலங்களில் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்றாா்.

விவசாயிகளின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா். இந்தக் கூட்டத்தில், வேளாண் துறையின் இணை இயக்குநா் ராணி, நோ்முக உதவியாளா் சாந்தி, அரசு அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி....

ஆட்சியரை முற்றுகையிட்ட மேலூா் விவசாயிகள்:

விவசாயிகள் குறைதீா் கூட்டம் தொடங்கிய போது, வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறப்பதில் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும், மேலூா் ஒருபோக பாசனப் பகுதிக்கு விரைவில் தண்ணீா் திறக்க வலியுறுத்தியும் மேலூா் பகுதி விவசாயிகள் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவை முற்றுகையிட்டனா். இதற்கு, இருபோக பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது, ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஒருபோகம், இருபோகம் பகுதி விவசாயிகளிடையே கூட்டம் நடத்தி, அவா்களின் கருத்துகள் கேட்கப்படும். அதன்பிறகு, மேலூா் பகுதிக்கு தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் அவரவா் இருக்கையில் அமா்ந்தனா். தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது. இதனால், கூட்டரங்கில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.