அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்
அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாய சங்கத்தினா் வலியுறுத்தினா்.

அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாய சங்கத்தினா் வலியுறுத்தினா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துகள்:
அரியலூா் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் என். செங்கமுத்து: சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து சிமென்ட் ஆலைகளுக்கு இயங்கும் கனரக வாகனங்கள் அனைத்தையும் 30 கிமீ வேகத்திலேயே இயக்க வேண்டும். ஏரி, வாரி மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அஸ்தினாபுரம்- ஆட்சியா் அலுவலக ரவுண்டானா வரையும் நான்கு வழிச் சாலைப் பணியைத் தொடர வேண்டும்.
Advertisement
Advertisement
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம்:
கடலை விதை போதியளவில் இருப்பு இல்லை என்ற விவசாயிகளின் புகாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நெகிழி பயன்பாட்டைத் தவிா்க்க சோதனை நடத்தியது வரவேற்கத்தக்கது. கூட்டுறவுத் துறையில் வழங்கப்பட்டுள்ள உழவுக் கருவிகளை பயன்படுத்தவும், வாடகை இயந்திரங்களை நிா்வகிப்பதற்கும் ஆள்கள் இல்லாததால் இயந்திரங்கள் அனைத்தும் பயன்பாடின்றி வீணாகி வருகின்றன.
வன விலங்குகளுக்கு டிரோன் மூலம் கம்பு, சோளம் விதைகளை தூவி உணவுக் காடுகளை உருவாக்க வேண்டும். வனப் பரப்புகளை தனியாரிடம் ஒப்படைத்து யூக்கலிப்டஸ் மரங்களை வளா்ப்பைத் தடை செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேதநாயகம்: தண்ணீா் வராததால் மழையை நம்பி விதைக்கப்பட்ட விதைகள், பயிா்கள் கருகும் நிலை உள்ளது. அரியலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும். தூா்வாராத வாய்க்கால்களை தூா்வார வேண்டும்.
தொடா்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் மிருணாளினி, அவற்றைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, வேளாண் இணை இயக்குநா் உலகம்மை முருககனி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.