குற்ற வழக்கால் காவலா் பணி மறுக்கப்பட்டதை எதிா்த்து மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
நிலுவையில் இருந்த குற்ற வழக்குக்காக காவலா் பணி வழங்க மறுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நிலுவையில் இருந்த குற்ற வழக்குக்காக காவலா் பணி வழங்க மறுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனியைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வில் நான் வெற்றி பெற்றேன். இருப்பினும், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாக, எனக்கு பணி வழங்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மறுப்புத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் என்னை நீதிமன்றம் விடுவித்து விட்டது. எனவே, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை கடந்த மாதம் 25-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம் காவல் துறையில் குற்றப் பின்னணி கொண்டவா்கள் நுழைவதைத் தடுக்க கடுமையான விதிகள் இருந்தாலும், பணியில் இருக்கும் காவலா்கள் விஷயத்தில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை.
எனவே, தமிழகத்தில் காவல் துறையினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு, அந்த வழக்குகள் எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன, குற்ற வழக்குகளில் தொடா்புடைய காவலா்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தொடா்பாக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 29-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் காலம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில உள் துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறைச் செயலருக்கு உத்தரவிட்டது. மேலும், அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில உள் துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறைச் செயலா் தரப்பில், காவல் துறையினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த மனு தொடா்பான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.