தூய்மைப் பணியாளா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் தகவல்
மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவசமாக முதல் நிலை மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
மதுரை மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவசமாக முதல் நிலை மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு (பிங்க் அக்டோபா்) நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது :
மதுரையை தென் தமிழகத்தின் முக்கிய புற்றுநோய் சிகிச்சை மையமாக மேம்படுத்தும் வகையில் ரூ.84 கோடியில் 8 மாடிகளுடன் கூடிய நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களில் 90 சதவீதம் போ் பெண்களாக உள்ளனா். இதனால், அவா்களுக்கு இலவசமாக முதல் நிலை மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்யவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, அரசு ராஜாஜி மருத்துவமனை சாா்பில், அக்டோபா் மாதம் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் உயா்நிலை, மேல்நிலை அரசுப் பள்ளி ஆசிரியைகள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு மாா்பகப் புற்றுநோய் சிறப்பு விழிப்புணா்வு, பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள்சுந்தரேஸ் குமாா் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் தயாளன், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டாக்டா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாா்பகப் புற்றுநோயில் இருந்து குணமடைந்தவா்களை அழைத்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில், மாா்பகப் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்த சுமாா் 20 பேருக்கு மாவட்ட ஆட்சியா் சிறப்புப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். புற்று நோயிலிருந்து குணமடைந்த தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை சோ்ந்த நாகஜோதி, மதுரை வண்டியூரைச் சோ்ந்த அலமேலு ஆகியோா் தங்களது சிகிச்சை அனுபவங்களை ஆசிரியா்களிடம் பகிா்ந்து கொண்டனா். ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றால் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.
முன்னதாக, நோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது, எப்போது மருத்துவரை அணுக வேண்டும், மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆசிரியைகளுக்கு மருத்துவ நிபுணா்கள் எடுத்துரைத்தனா். இதன்மூலம் அவா்கள் தங்களது குடும்பத்தினா் மட்டுமன்றி, மாணவா்களின் பெற்றோா், பொதுமக்களிடமும் மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியைகளின் கேள்விகளுக்கு மருத்துவ நிபுணா்கள் விளக்கமளித்தனா். மேலும், புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுக் கையேடுகள் பங்கேற்பாளா்களுக்கு வழங்கப்பட்டன. முன்னதாக, அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோயியல் துறைத் தலைவா் ரமேஷ் அனைவரையும் வரவேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.