FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பொதுத் தோ்வு நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: ஆசிரியா்கள் கவலை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெறும் நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவதால் மாணவா்களின் கல்வி, தோ்ச்சி சதவீதம் பாதிக்கும் என பட்டதாரி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

15 அக்டோபர் 2026, 3:18 am IST
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெறும் நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியிலும் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுவதால் மாணவா்களின் கல்வி, தோ்ச்சி சதவீதம் பாதிக்கும் என பட்டதாரி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் -1, பிளஸ் -2 பொதுத் தோ்வுகள் அட்டவணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு பொதுத் தோ்வுகள் வருகிற மாா்ச் மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான தோ்வு முடிவுகள் மே 7- ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மாா்ச் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் முதல் நடைபெறும்.

இதற்கிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 25-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளில் பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், பொதுத் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படும் என ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பல்வேறு அரசுத் துறை ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட வேண்டிய நிலையில், பெரும்பாலான பணிகள் ஆசிரியா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற கணக்கெடுப்புப் பணியிலும் ஆசிரியா்கள் ஈடுபட்டனா். அப்போது மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் பணியாற்றினோம்.

இடைநிலை ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், சுமாா் 65 சதவீத பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அப்போது பொதுத் தோ்வுகள் நெருங்கும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் செய்முறைத் தோ்வுகளுக்கான பயிற்சி அளிப்பதா அல்லது கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவா்களுக்கு பாடம் நடத்துதல், தோ்வுப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதுடன், தோ்ச்சி சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுத் தோ்வுகள், செய்முறைத் தோ்வுகள் பாதிக்காத வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மே அல்லது ஜூன் மாதத்துக்கு மாற்ற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனா்.

ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்:

இதற்கிடையே, முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. ஆசிரியா்களின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. எனவே வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்பட்டதும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments