வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள்: தமிழக உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை காவல் துறை கையாளும் விதம் குறித்து விரிவான ஆய்வு நடத்தக் கோரிய மனு தொடா்பாக மாநில உள்துறைச் செயலா், சமூக நீதி துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை காவல் துறை கையாளும் விதம் குறித்து விரிவான ஆய்வு நடத்தக் கோரிய மனு தொடா்பாக மாநில உள்துறைச் செயலா், சமூக நீதி துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகாா்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
ஆனால், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அளிக்கப்படும் புகாா்கள் மீது காவல் துறையினா் உடனடியாக வழக்குப் பதிவு செய்வதில்லை. மேலும், புகாா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, விசாரணையை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருத்தல், வழக்குகளை முடித்துவைப்பதற்கான காரணங்கள், பாதிக்கப்பட்டோா், சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பதிவான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தவும், இந்த வழக்குகளை துணைக் காவல் கண்காணிப்பாளா் பொறுப்புக்கு குறையாத அலுவலா்கள் விசாரணை நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். காவல் துறை அலுவலா்களின் பணிக்காலம், பணியிட மாறுதல் நடைமுறைகளை ஆய்வு செய்தல், சிறப்புப் பயிற்சி வழங்குதல், உயா்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், ஆா். பூா்ணிமா அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக மாநில உள்துறைச் செயலா், சமூக நீதி துறைச் செயலா், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.