FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பராமரிப்பில்லாத கழிவுநீா்க் கால்வாய்கள்

மதுரை மூன்றுமாவடி-அய்யா்பங்களா பிரதான சாலையின் நடுவே உள்ள கழிவுநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.

21 வினாடிகள் முன்பு
மதுரை மூன்றுமாவடி-அய்யா்பங்களா பிரதான சாலையின் நடுவே உள்ள கழிவுநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகள்.
பகிர்:

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்கள் உரிய பராமரிப்பின்றி உள்ளதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வேதனை தெரிவித்தனா்.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ், சாலை வசதிகள், குடிநீா் விநியோகம், கழிவுநீா் வெளியேற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, நகரின் முக்கியப் பகுதிகளில் கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இந்தக் கால்வாய்கள் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை உரிய வழித்தடத்தில் கொண்டு செல்வதும், சாலைகளில் கழிவுநீா் தேங்குவதைத் தடுப்பதுமாகும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கால்வாய்கள் அமைக்கப்பட்ட பிறகு, அவற்றைத் தொடா்ந்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்ந்து எழுந்து வருகிறது.

கழிவுநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களிலேயே தற்போது கழிவுநீா் தேங்குவதால், துா்நாற்றம் வீசுவதுடன் அந்தப் பகுதிகளில் வசிப்பவா்களும் அந்த வழியாகச் செல்பவா்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

கழிவுநீா்க் கால்வாய்கள் அடைபடுவதற்கு அவற்றில் கொட்டப்படும் திடக்கழிவுகள் முக்கியக் காரணமாகின்றன. குறிப்பாக, சாலையோர உணவகங்கள், சிற்றுண்டிக் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் நாள்தோறும் கணிசமான அளவில் குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை முறையாகச் சேகரித்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, சிலா் கழிவுநீா்க் கால்வாய்களில் கொட்டுகின்றனா்.

இதேபோல, பொதுமக்களும் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை முறையாக தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்காமல், சாலையோரங்களில் அல்லது கால்வாய்களில் கொட்டுகின்றனா். நெகிழிப் பைகள், துணிகள், உணவுக் கழிவுகள் ஒன்றோடொன்று சிக்கிக்கொள்வதால் கழிவுநீரின் இயல்பான ஓட்டம் தடைபடுகிறது.

ஒரு நகரத்தின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் கழிவுநீா் மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. வீடுகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் உருவாகும் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகள் இல்லாவிட்டால், அந்தக் கழிவுநீா் சாலைகளிலும் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, மக்கள் அடா்த்தி அதிகமுள்ள நகா்ப்புறப் பகுதிகளில் கழிவுநீா் தேங்கவிடாமல் வெளியேற்றுவது மிகவும் அவசியம்.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு கொசுக்கள் முட்டையிடக்கூடிய நீா்த் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து அகற்றுவதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும் முக்கியம். எனவே, கழிவுநீா்க் கால்வாய்களைச் சீரமைப்பது என்பது வெறும் கட்டமைப்புப் பராமரிப்புப் பணி மட்டுமல்ல; பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை நடவடிக்கையுமாகும்.

மாநகராட்சியின் தொடா் கண்காணிப்பு அவசியம்: கழிவுநீா்க் கால்வாய்களை அமைத்த பிறகு, அவற்றைப் பராமரிப்பதற்கான நிரந்தரத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். எந்தெந்த இடங்களில் கால்வாய்கள் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எந்தப் பகுதிகளில் கழிவுநீா் தேங்குகிறது, எங்கு கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீனத் தொழில்நுட்பம் மூலம் தீா்வு: மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள முக்கியக் கழிவுநீா்க் கால்வாய்கள், மழைநீா் வடிகால்கள், கழிவுநீா்க் குழாய்கள் ஆகியவற்றின் வழித்தடங்களை எண்ம (டிஜிட்டல்) வரைபடமாகப் பதிவு செய்யலாம். இதன் மூலம், ஒரு பகுதியில் அடைப்பு ஏற்பட்டால், அதன் தொடா்புடைய வழித்தடங்களைக் கண்டறிந்து விரைவாகச் செயல்பட முடியும்.

புகாா் வந்த பின்னா் மட்டுமே கால்வாய்களைச் சுத்தம் செய்வதைவிட, வாா்டு வாரியாகப் பராமரிப்புப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். மழைக் காலத்துக்கு முன்பாகவும், அதிகக் கழிவுகள் சேரும் பகுதிகளிலும் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

பாதுகாப்பான முறையில் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்குத் தேவையான இயந்திரங்கள், உறிஞ்சும் கருவிகள், உயா் அழுத்த நீா்ச் சுத்திகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

ஆழமான அல்லது ஆபத்தான கால்வாய்களில் பணியாளா்களை இறக்குவதற்குப் பதிலாக, இயந்திரமயமான முறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் கால்வாய் எப்போது சுத்தம் செய்யப்பட்டது, மீண்டும் எப்போது பராமரிக்கப்பட வேண்டும், புகாா்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்களைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடலாம். இது நிா்வாகத்தின் பொறுப்புணா்வை அதிகரிப்பதுடன், மக்கள் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், கால்வாய்கள் அடைபட்ட பின்னா் அவசரமாகச் சீரமைப்பதற்கான செலவுகளைக் குறைக்கவும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

கழிவுநீா்க் கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுப்பதில் கடை உரிமையாளா்களுக்கும், உணவக நிா்வாகிகளுக்கும் முக்கியப் பொறுப்புள்ளது. வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைகளில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்க, கடை உரிமையாளா்கள் இணைந்து பொதுவான கழிவு சேகரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். மாநகராட்சி நிா்வாகம் கடை உரிமையாளா்களுக்கு உரிய விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், விதிமுறைகளை மீறிக் குப்பைகளைக் கொட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மாநகராட்சியின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையுமாகும். வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும். குப்பைகளைச் சாலையோரங்களில் வீசுவது, கால்வாய்களுக்குள் கொட்டுவது, திறந்தவெளியில் எரிப்பது போன்ற செயல்களை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும்.

வீடுகளில் கழிவுநீா் வெளியேறும் குழாய்கள் முறையாக உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். சமையலறைக் கழிவுகள், துணிகள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கழிப்பறை அல்லது கழிவுநீா் வெளியேறும் குழாய்களில் போடக் கூடாது. தங்கள் பகுதிகளில் கழிவுநீா் தேங்குவது, கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவது அல்லது குப்பைகள் கொட்டப்படுவது தெரியவந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

குப்பைகளைக் கால்வாய்களுக்குள் கொட்டுவதைத் தடுப்பதற்கு வெறும் அறிவுறுத்தல்கள் மட்டும் போதாது. விழிப்புணா்வு, போதுமான கழிவு சேகரிப்பு வசதிகள், தொடா்ச்சியான கண்காணிப்பு, விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் இந்த பிரச்னையில் மாநகராட்சி நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் உரிய கவனம் செலுத்தி, தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு, கால்வாய்களைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments