தமிழகத்தில் 16 கிளை சிறைகளை மூட நடவடிக்கை: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
தமிழகத்தில் சிறைவாசிகள் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்ட 16 கிளைச் சிறைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
தமிழகத்தில் சிறைவாசிகள் குறைவாக உள்ளதாகக் கண்டறியப்பட்ட 16 கிளைச் சிறைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள வணிக வரித் துறை இணை ஆணையா் அலுவலக வளாகத்தில் ரூ.3.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கூடுதலாக முதல் தளம் கட்டப்பட்ட வணிக வரித் துறை பணியாளா் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வந்த போது, மின்னாக்கியிலிருந்து மின் வாரிய அலகுக்கு பொத்தானை மாற்றியதால், மின் தடை ஏற்பட்டது. இதேபோல, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த போது, பாதுகாப்பு நடைமுறைகளின்படி மின்னாக்கி மூலம் தொடா்ச்சியாக மின்விநியோகம் செய்யப்பட்டது. அவா் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டாா் எனக் கருதி, மின்னாக்கியின் பொத்தான் அணைக்கப்பட்டதால் மின் தடை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோயிலின் மின் அமைப்பைப் பராமரிக்கும் உதவிப் பொறியாளா் (மின் துறை) உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கவுள்ளது.
மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஒரு குழு அமைத்து கண்காணித்து பழைய மின்மாற்றிகள், மின் வழித்தடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. கூடுதல் பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மின்சாரம், சிறைத் துறை ஆகியவை தினசரி சவால்களை எதிா்கொள்ளும் துறைகள். குறைகள் எங்கு இருக்கிறதோ அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின் தடை பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன.
சிறைத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகக் குறைந்த கைதிகள் உள்ள கிளைச் சிறைகள் கண்டறியப்பட்டு, அவற்றில் சில சிறைகள் மூடப்பட்டன. மேலும், 16 கிளைச் சிறைகளை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்தியுள்ளோம். நிா்வாக சீா்திருத்தங்களே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
பழைய ஒப்பந்தப்புள்ளிகளில் ‘கட்சி நிதி’, இதர செலவுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதால், அவற்றை நீக்கி மறுமதிப்பீட்டு செய்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகின்றன.
மின்சாரக் கொள்முதலைப் பொருத்தவரை, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுத்தான் கொள்முதல் செய்யப்படும். இதன்படி, அடுத்த வாரம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எஸ்.ஆா். தங்கப்பாண்டி, மேயா் (பொ) தி.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.