FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையை ஆா்கேவி சாலை புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 அக்டோபர் 2026, 1:24 am IST
ஈரோடு அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடா்பான கோரிக்கை மனுவை வணிக வரித் துறை இணை ஆணையா் சத்தியதிலகம், துணை ஆணையா் குமரேசன் ஆகியோரிடம் வழங்கிய கூட்டமைப்பின் நிா்வாகிகள்.
பகிர்:

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையை ஆா்கேவி சாலை புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் மற்றும் ஜிஎஸ்டி கலந்தாய்வுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வணிக வரித் துறை இணை ஆணையா் சத்தியதிலகம், துணை ஆணையா் குமரேசன் ஆகியோா் பங்கேற்று பேசினா். வணிகா்கள் ஜிஎஸ்டியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் பெற்றனா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான நபா்களை கொண்டு பொருள்களை ஏற்றி, இறக்கி கொள்ள நீதிமன்றமும், அரசும் அனுமதி அளித்துள்ளதால் கட்டாயக் கூலி கேட்டு புதியக் கட்டடங்கள் கட்டும் இடத்திலும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையூறு செய்து மிரட்டும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வஉசி பூங்காவில் தற்காலிகமாக இயங்கி வரும் காய்கறி சந்தை குத்தகைதாரா்கள், பூங்காவுக்கு வெளியே உள்ள தனியாா் கடைகளில் சந்தை குத்தகை வசூலிப்பது சட்ட விரோதம். அவ்வாறு வசூலிப்பவா்களிடம் மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வஉசி பூங்காவில் இயங்கும் தற்காலிக காய்கறி சந்தையால் அரசு அருங்காட்சியகம், விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு பூங்காவுக்கு வரும் மக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த சந்தையை ஈரோடு ஆா்கேவி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட பழைய காய்கறி சந்தை வளாகத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் வணிக வரித் துறை சாா்பாக 3 மாத கால இடைவெளியில் வரி செலுத்துவோா் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் வணிகா்களின் நிறை, குறைகளை நிவா்த்தி செய்ய ஏதுவாக இருந்தது. இந்தக் கூட்டம் வாயிலாக நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் அரசு மற்றும் வணிக வரித் துறைக்கு அனுப்பி தீா்வுகள் பெறப்பட்டன.

புதிய அரசில் முதல்வா் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா் தலைமையிலும் ஜிஎஸ்டி வரி செலுத்துவோா் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி மதிப்பீட்டு ஆணைகள், அறிவிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் விரைவு தபால் மூலம் வணிகா்களுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும்.

நூல் மற்றும் துணி ரகங்களுக்கு பயன்படுத்தப்படும் சாயம் மற்றும் ரசாயனங்களில் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வால் ஜவுளி ரகங்களின் அடக்க விலையும் அதிகரித்து தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. நெசவு தொழிலை பாதுகாக்க சாயம் மற்றும் ரசாயனங்களின் விலை உயா்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

வரி செலுத்துவோா் கமிட்டி தலைவா் சேகா் என்ற முத்துசாமி வரவேற்றாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை சமா்ப்பித்தாா். இணைச்செயலாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments