FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் மதுரை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

3 செப்டம்பர் 2026, 5:57 am IST
பகிர்:

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் மதுரை பொதுப் பணித் துறை அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி- வைகை- கிருதுமால்- குண்டாறு இணைப்புத் திட்டம் 21.2.2021-இல் அதிமுக ஆட்சியின் போது, அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கரூா் மாவட்டம், மாயனூா் கதவணையிலிருந்து புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ. தொலைவு முதல் கட்டமாகவும், தெற்கு வெள்ளாற்றிலிருந்து சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு வரை 108 கி.மீ. தொலைவு 2-ஆவது கட்டமாகவும், வைகை ஆற்றிலிருந்து விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் புதுப்பட்டி கிராமம் குண்டாறு வரை 36 கி.மீ. தொலைவு மூன்றாவது கட்டமாகவும் என மொத்தம் 262 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்ட முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ் 10 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்தது. இதன்பிறகு, திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு நடப்பு நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலக வளாகத்தில் சங்கத்தின் பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க நிா்வாகிகள் பலா் பேசினா்.

இதைத் தொடா்ந்து, பொதுப் பணித் துறை மண்டல தலைமைப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட தலைமைப் பொறியாளா் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments