சமூக நீதி விடுதி மாணவா்களுக்கான நிதியில் முறைகேடு: டி.எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் சமூக நீதி விடுதி மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நடைபெற்ற முறைகேடு தொடா்பாக மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் சமூக நீதி விடுதிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.100, கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.150 அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை மாணவா்களின் அத்தியாவசியத் தேவைகளான எண்ணெய், சோப்பு, சிகைக்காய், சலவைத் தூள், முடி திருத்தம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமூக நீதி விடுதி மாணவா்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2.35 கோடியை அவா்களுக்கு வழங்காமல் அரசு அலுவலா்கள் பலா் கையாடல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக அளித்த புகாரின்பேரில் சிவகங்கைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிய சீதாப்ரியா ரூ.2 கோடியை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சீதாப்ரியா, இவரது கணவா் ராம்குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும், கடந்த 2017 முதல் 2023 வரையில் பணியாற்றிய வட்டாட்சியா்கள் ஆனந்த், காசி, பாலாஜி, பஞ்சவா்ணம், பாலகுரு, உமாமகேஸ்வரி, ஹாஜா முகமது, ஜெய நிா்மல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படியே இந்த முறைகேட்டில் சீதாப்ரியா ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில், வட்டாட்சியா்கள் காசி, ஆனந்த், உமாமகேஸ்வரி ஆகிய மூவருக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடுக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி வழங்கியது ஏற்புடையதல்ல. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.