கருணாநிதி மறைவு: அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவடங்களில் அனைத்துக்
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவடங்களில் அனைத்துக் கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மௌன ஊர்வலம் சென்றும் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரத்தில் உணவகங்கள், பேக்கரிகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. ராமநாதபுரம் நகர் முழுவதும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வீதிகளில் கருணாநிதியின் உருவப் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். பெட்ரோல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
தொமுச நிர்வாகிகள் மொட்டை: ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துக் கழக கிளை முன், தொமுச செயலாளர் ஆர்.செல்வக்குமார் தலைமையில், தலைவர் ஆர்.கண்ணன், பொருளாளர் சி.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.ராஜேந்திரன், எஸ்.ஆண்டிச்சாமி, உறுப்பினர்கள் சி.செந்தில்குமார், பூபதி ஆகிய 7 பேர் கருணாநிதி மறைவுக்காக மொட்டையடித்துக் கொண்டனர். பின்னர், கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பழங்குடியின மக்கள் அஞ்சலி: ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பழங்குடி இன மக்கள் கருணாநிதி உருவப் படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம் கூறுகையில், "சினிமா, நாடகம் ஆகியவற்றில் பழங்குடியினரை ஒரு காட்சிப் பொருளாக பயன்படுத்தி வந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் எங்கள் குடும்ப நலம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். எங்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார் என்றார்.
அனைத்துக் கட்சியினர் மௌன ஊர்வலம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து அனைத்துக்கட்சியினர் மௌன ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்துக்கு ராமநாதபுரம் நகர் திமுக அவைத் தலைவர் கோகுல முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ்.அய்யனார், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகன்னாதன், நிர்வாகிகள்
ஆர்.கே.கார்த்தி, டி.கே. குமார், முன்னாள் கவுன்சிலர் பி.முனியாண்டி, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் யாசின், காங்கிரஸ் மாவட்ட இலக்கிய அணியின் தலைவர் எம்.முருகேசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், தமிழ்ச்சங்க துணைத் தலைவர்கள் வைகிங். எம்.எஸ்.கருணாநிதி, குழ.விவேகானந்தன், பொருளாளர் மங்களசுந்தரமூர்த்தி, நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பார்த்தீபன் உள்பட பல்வேறு அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் அரண்மனை முன் நிறைவு பெற்றது.
கமுதியில்: கமுதியில் திமுக சார்பில், முன்னாள் ஊராட்சித் தலைவர் எ.முருகன் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. மருதுபாண்டியர் சிலையில் தொடங்கி நாடார்பஜார், முஸ்லிம்பஜார், செட்டியார் பஜார், பேருந்து நிலையம், பழைய தாலுகா அலுவலக வீதி வழியாக மீண்டும் மருதுபாண்டியர் சிலையில் ஊர்வலம் முடிவடைந்தது. இதில், அனைத்துக்கட்சியினர், வணிகர்கள், சாலையோர வியாபாரிகள் பங்கேற்றனர். பின்னர், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. கமுதி துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருவாடானையில்: திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. திமுகவினரும் ஆங்காங்கே அஞ்சலி செலுத்தினர். சிலர் மொட்டையடித்தனர்.
திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் திமுகவினர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடியில்: பரமக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நகர், கிராமப் பகுதிகளுக்கு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. உணவகங்கள் மூடப்பட்டதால் வெளியூர் பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர். அவசரமாக வெளியூர் செல்வோர் ரயில் பயணத்தை மேற்கொண்டனர்.
நகரில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாத வகையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அரசு பொதுவிடுமுறை விடப்பட்டதால் அனைத்து
அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. வங்கிகள் செயல்படவில்லை. மத்திய அரசின் கீழ் செயல்படும் தபால் நிலையங்கள், ரயில் நிலையம் மட்டும் செயல்பட்டன. ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது.
எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், தரைப்பாலம், எஸ்.எஸ்.கோவில் தெரு, சந்தைக்கடை, பேருந்து நிலையம், காந்திஜி சாலை, உழவர் சந்தை வழியாக முத்தாலம்மன் கோயில் வரை மௌன ஊர்வலம் சென்றனர்.
இந்த ஊர்வலத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என அனைத்துக் கட்சி நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திமுக தொண்டர்கள் அந்தந்த பகுதியில் திமுக கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டனர். மேலும், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை,இளையான்குடி,சிங்கம்புணரி, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டன. இவைதவிர, அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்சிகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முழுவதும் இயங்கவில்லை.
மாவட்டம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை சமத்துவபுரத்தில் திமுக தொண்டர்கள் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினர். அனைத்துக் கட்சியினர் மெளனஅஞ்சலி ஊர்வலம் சென்றனர். சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றம் முன்பு தொடங்கிய ஊர்வலம் காந்தி வீதி, நெல் மண்டி தெரு, மரக்கடை, தெற்கு ராஜரத வீதி, நேரு கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, அரண்மனை வாசல் முன் நிறைவடைந்தது.
இதில், சிவகங்கை இளைய மன்னர் மகேஷ்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகராஜன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கந்தசாமி, வழக்குரைஞர் மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு அனைத்துப் பகுதிகளிலும் சுமார் 1300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காரைக்குடியில்: காரைக்குடியில் தி.க. மண்டலத் தலைவர் சாமி. திராவிடமணி தலைமையில் காரைக்குடி பெரியார் சிலை அருகே கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திமுக, காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்கத்தினர் செக்காலைச் சாலை, கல்லுக்கட்டி வீதிகள் வழியாக ஊர் வலமாக அண்ணா சிலை பகுதிக்குச் சென்று கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில், திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஏஐடியுசி, தொமுச நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். நகரின் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டிருந்தனர்.
திருப்பத்தூரில்: திருப்பத்தூர் காந்தி சிலை அருகே கருணாநிதியின் உருவப்படத்துக்கு அனைத்துக் கட்சியினர், வர்த்தகர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மாலையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைதி ஊர்வலமாகப் புறப்பட்டு பேருந்து நிலையம், மதுரைரோடு வழியாக அண்ணா சிலையை அடைந்தனர். முன்னதாக சென்னையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலக் காட்சிகள் பெரிய திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மானாமதுரையில்: மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அக்கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இளையான்குடி கிழக்கு, மேற்கு ஒன்றிய பகுதிகள், பேரூர் பகுதிகளில் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இளையான்குடி நகரில் திமுகவினர் ஏராளமானோர் மௌன ஊர்வலம் சென்றனர்.
மானாமதுரை ஒன்றியம் மற்றும் நகர், திருப்புவனம் பகுதிகளில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வியாபாரிகளும் கடைகளை அடைத்தனர். இதனால் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.