வளரும் நாடுகளில் இந்தியா முதலிடம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் எம்.கே.சூரப்பா
வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.
வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா தெரிவித்தார்.
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் 30 ஆவது பட்டமளிப்பு விழா அக்கல்லூரியின் கலையரங்கில் முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.எம்.முகம்மது யூசுப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளையின் செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம்,முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அ.அலாவுதீன், செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன், சதக் கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அலுவலர் கே.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் 104 பேருக்கு முதுகலைப் பட்டமும்,370 பேருக்கு இளங்கலைப் பட்டமும் உள்பட மொத்தம் 474 பேருக்கு பட்டங்களை வழங்கி எம்.கே.சூரப்பா பேசியது:
வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிலும், மென்பொருள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் சிலிக்கன்வேலியிலும் இந்தியர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் தொழில் நுட்பத்தில் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கும் நுட்பங்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே எதிர்காலத்தை சிறப்பானதாக ஆக்கிக் கொள்ள முடியும் என்றார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஜெ.அப்பாஸ் முகைதீன் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரியின் நெறியாளர் ஜெ.முஹம்மது ஜஹாபர்,முகம்மது சதக் ஹமீது பெண்கள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நாதிராபானு, பேராசிரியர்கள், பட்டம் பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் உட்பட ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை பொறியியல் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் நிஜாமுதீன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.