FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ராமநாதபுரத்தில் தப்பிய விசாரணைக் கைதி ஆரணியில் பிடிபட்டார்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது தப்பிய விசாரணைக் கைதி

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது தப்பிய விசாரணைக் கைதி வேலூர் மாவட்டம் ஆரணி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவேலியில் கடந்த 6 ஆம் தேதி சிவசங்கர பாண்டியன் என்பவரது வீட்டில் புகுந்து திருட முயன்றதாக சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் பிடித்தனர். அப்போது சிலர் தாக்கியதால் சந்தோஷ்குமார் காயமடைந்தார். தகவலறிந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் விரைந்து சென்று சந்தோஷ்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.  
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி கழிப்பறை ஜன்னல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு அவர் தப்பினார். இது தொடர்பாக சார்பு- ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சந்தோஷ்குமாரைப் பிடிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.  காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையில் சார்பு- ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம், ஆர்.எஸ்.மங்களம் தலைமைக் காவலர் பாலமுருகன், முதல் நிலைக் காவலர்கள் ராஜ்குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். சந்தோஷ்குமார் கூறியிருந்த சென்னை வியாசர்பாடி முகவரிக்கு சென்று தனிப்படையினர் விசாரித்தபோது அது போலி முகவரி எனத் தெரிந்தது. மேலும் ரெட்ஹில்ஸ் பகுதி அருகேயுள்ள சந்தோஷ்குமார் வீட்டுக்குச் சென்றபோது அவர் கடந்த இரு ஆண்டுகளாக வீட்டுக்கே வரவில்லை எனத் தெரிவித்தனர். 
விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் அவர் தனது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு போலீஸார் சென்றபோது, அங்கிருந்து தப்பிய சந்தோஷ்குமார் வேலூர் மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள கும்மிடிப்பூண்டி ஆற்றங்கரையோர பகுதியில் பதுங்கியிருந்தார். 
 அவரை தனிப்படையினர்  சுற்றிவளைத்தனர். அப்போது முதல்நிலைக் காவலர் ராஜேஸின் இடது கை கட்டை விரலை சந்தோஷ்குமார் கடித்துவிட்டு தப்பமுயன்றார். அவரை விரட்டிப் பிடித்த போலீஸார் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு புதன்கிழமை அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய விசாரணைக் கைதியை ஆந்திர மாநிலம் வரை சென்று விரட்டிப்பிடித்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments