திருவாடானை அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் காலியாகவுள்ள கிராமப் பள்ளிக்கூடம்: பொதுமக்கள் புகார்
திருவாடானை அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி கிராமப் பள்ளிக் கூடம் காலி செய்யப்படும் நிலை உள்ளது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானை அருகே அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, நீதிமன்ற உத்தரவின்படி கிராமப் பள்ளிக் கூடம் காலி செய்யப்படும் நிலை உள்ளது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானை அருகே புல்லக்கடம்பன் ஊராட்சிக்குள்பட்ட சோழகன்பேட்டை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியும், உயர் நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளிகள் உள்ள இடம், அதே ஊரைச் சேர்ந்த சுலைகா பீவி (50) என்பவருக்கு பாத்தியமானது என்று, திருவாடானை நீதிமன்றத்தில் அவர் கடந்த 2003 இல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர், திருவாடானை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரையும் சேர்த்துள்ளார். ஆனால், இந்த வழக்கில் அதிகாரிகள் யாரும் ஆஜராகாமல் இருந்துள்ளனர். இதனால், கடந்த 2009 ஆம் ஆண்டில் சுலைகா பீவிக்கு ஆதரவாக தீர்ப்பானது. அதையடுத்து, அந்தத் தீர்ப்பில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கூடம் இருக்கும் இடத்தை மனுதாரர் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
அதன்பேரில், நீதிமன்றத்திலிருந்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு வியாழக்கிழமை தபால் அனுப்பப்பட்டுள்ளது.
இதையறிந்த கிராமத்தினர், இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று, திருவாடானை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பாலமுருகன் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
இது குறித்து சோழகன்பேட்டை கிராம மக்கள் கூறியது: இந்த வழக்கில் அதிகாரிகள் தரப்பில் ஆஜராகி வாதாடி இருந்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, கிராமப் பள்ளிக்கூடத்துக்கு ஏற்பட்ட நிலைக்கு, அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என்று தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.