வலையராதினிப்பட்டி கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை தொடக்கம்
பல்வேறு கட்டப் போராட்டத்துக்கு பின்பு சிவகங்கையிலிருந்து வலையராதினிபட்டி கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கியது.
பல்வேறு கட்டப் போராட்டத்துக்கு பின்பு சிவகங்கையிலிருந்து வலையராதினிபட்டி கிராமத்துக்கு அரசு பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கியது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வலையராதினிப்பட்டி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்துக்கு செல்லும் வகையில் பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி ஊரைக் காலி செய்து அருகே உள்ள வெள்ளமலை காட்டுக்குள் குடியேறி உணவு சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியர் ராஜா, சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளர் சீராளன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேருந்து இயக்குவதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில்,சிவகங்கையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து கள்ளாராதினிப்பட்டி, திருமலை வழியாக வலையராதினிபட்டிக்கு காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் அரசு நகரப்பேருந்து இயக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து,புதன்கிழமை அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இப்பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
இதைதொடர்ந்து,அரசு பேருந்து சேவை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியருக்கும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் வலையராதினிப்பட்டி கிராமப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், இக்கிராமத்துக்கு தேவையான தெருவிளக்கு,குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.