கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: 18-ல் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது. இதையொட்டி கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி பூப்பல்லக்கிலும் குதிரை, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வருதல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய வைபவமாக 18 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ராமலிங்க சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
Advertisement
Advertisement
அதன்பின் மாலை தேரோட்டமும் இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி முத்தனேந்தல் வைகை ஆற்றுக்கு சென்று நீராடுதல் வைபவம் நடைபெறுகிறது. அதன்பின் மறுநாள் 20 ஆம் தேதி வைகையாற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
21 ஆம் தேதி கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நோபிள்ராம் மற்றும் கட்டிக்குளம் பொதுமக்கள் செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.