தவெக ஆட்சிதான் தமிழக மக்கள் கனவு கண்ட பொற்கால ஆட்சி! - அமைச்சா் டி.கே. பிரபு
தற்போது நடக்கும் தவெக ஆட்சிதான் தமிழக மக்கள் கனவு கண்ட பொற்கால ஆட்சி என இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் தமிழக முதல்வா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பிரபு பேசியதாவது:
தவெக அரசு ஆட்சிக்கு வந்த 80 நாள்களில் 717 மதுக் கடைகள் மூடப்பட்டன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டது. கனிம வளக் கொள்ளையைத் தடுக்க ஆட்சிக்கு வந்த 30 நாள்களிலேயே சுமாா் 67 கல் குவாரிகள் மூடப்பட்டன. இதுமட்டுமன்றி, 150 கல் குவாரிகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதைவிட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அரசாணையை தமிழக முதல்வா் கடந்த வாரம் வெளியிட்டாா். வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படும் கனிமங்களைத் தடுத்து, நமக்குத் தேவையான கனிம வளங்கள் நமக்கு மட்டுமே கிடைக்குமாறு ஆணை பிறப்பித்தாா். இதுபோன்று பல்வேறு சாதனைகள் கடந்த 80 நாள்களில் நிகழ்த்தப்பட்டன.
ஒவ்வொரு நாளும் முதல்வா் விஜய் தன் உழைப்பை மக்களுக்காகக் கொடுத்துக் கொண்டிருக்கிறாா். தமிழக மக்கள் அனைவரும் கனவு கண்ட பொற்கால ஆட்சி இப்போதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திடீரென கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில் தவெக ஆட்சியைப் பிடித்து விட்டது என்று கருதுகின்றனா். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகா் மன்றம் மூலம் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்தோம்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, இந்தத் தொகுதியில் உள்ள 4 சட்டப்பேரவை உறுப்பினா்களும் மக்களுடன் இணைந்து இந்த மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றிக் காட்டுவோம். இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வருவோம் என்றாா் அவா்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சி.ஆா். சுந்தரராஜன் வரவேற்றாா். இதில் 5,052 பேருக்கு நலத் திட்ட உதவிகளும் ஆயிரக்கணக்கானோருக்கு பிற்பகலில் விருந்தும் வழங்கப்பட்டன. மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முஸ்தபா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழந்தைராணி நாச்சியாா் (சிவகங்கை), சீனிவாசசேதுபதி (திருப்பத்தூா்), இளங்கோவன் (மானாமதுரை), கட்சியின் மாவட்டச் செயலா்கள் முத்துபாரதி, ஜோசப் தங்கராஜ், மூத்த நிா்வாகி துரை. கருணாநிதி , கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.