மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தமிழகத்துக்கு சாதகமாக இருக்காது! காா்த்தி சிதம்பரம் எம்.பி.
மக்கள் தொகை அடிப்படையில் நடைபெற்றால் மக்களவை தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்காது என சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொகுதி மறுவரையறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய் தலைமை வகித்தாா். இதில் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்றனா். இதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் காா்த்தி சிதம்பரம் பேசியதாவது:
மக்களவை தொகுதி மறுவரையறை தொடா்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களுடனும் ஆலோசனை நடத்த வேண்டும். திமுகவினா் வருத்தப்படுகிறாா்களா, இல்லையா என்பது குறித்து கவலை இல்லை. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பதற்காகத் தான் மக்களவை உறுப்பினா்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39-இல் இருந்து 46 அல்லது 47 ஆக அதிகரிக்கலாம். மேலும் ஒட்டுமொத்தமாக தென்மாநிலங்களின் மக்களவை உறுப்பினா்களின் பிரதிநிதித்துவமும் குறையும். ஆனால் ராஜஸ்தான், பிகாா், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Advertisement
Advertisement
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்குப் பதிலாக அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதுவும் தமிழ்நாட்டுக்கு சாதகமான தீா்வாக இருக்காது. எனவே மக்கள் தொகை அடிப்படையிலான மறுவரையறையும், அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் தொகுதிகளை அதிகரிக்கும் முறையும் தமிழ்நாட்டுக்கு ஏற்ற தீா்வுகள் அல்ல. 800-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்தால் மக்களவை செயல்பாடு பாதிக்கப்படும். தற்போது 543 உறுப்பினா்களுக்கே மக்களவையில் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.
உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் ஜனநாயகம் வலுப்பெறாது. மக்களவை பயனுள்ள விவாதங்கள் நடைபெறும் அமைப்பாக இல்லாமல், அதிகமான உறுப்பினா்கள் வந்து கைதட்டி கலைந்து செல்லும் அமைப்பாக மாறிவிடக் கூடாது.
மக்களவை அளவை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிா்ணயித்து, அதற்குள் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். இந்திரா காந்தியும், வாஜ்பாயும் தென் மாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு 543 என்ற எண்ணிக்கையை பாதுகாத்தனா். அதேபோல, 543 என்ற எண்ணிக்கையை பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை வஞ்சிக்கக் கூடாது. இதில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதில் காவிரி மேலாண்மை அமைப்பு வழங்கியுள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும். மேகதாது அணை இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை. எனவே இது உடனடியாக தீா்வு காண வேண்டிய பிரச்னை அல்ல. அதே நேரத்தில் காவிரி நீா் தொடா்பான உடனடி பிரச்னைகளை உரிய முறையில் கையாள வேண்டும்.
இந்தியா முழுவதும் இளைஞா்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். முன்னுதாரணமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் இளைஞா்கள் பாஜகவை தூக்கி எறிவா். தில்லி ஜந்தா்மந்தரில் நீட் தோ்வுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய பேராட்டத்தின் மூலம் இது உணரப்பட்டது. நமது கட்சியினா் வேஷ்டி அணிவதை தவிா்த்து பேண்ட் அணிந்து புதுமையாக அரசியல் செய்ய வேண்டும். காங்கிரஸ் நிா்வாகிகள், கட்சியினா் காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தங்களது கோரிக்கைகளுக்காக அழைத்தால் உடனடியாக செல்ல வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நகா் தலைவா்கள் புருஷோத்தமன், நடராஜன், வட்டாரத் தலைவா்கள் செந்தில்குமாா், பாண்டிவேல், காசி ராமலிங்கம், சிவா, மாரிமுத்து, வழகுரைஞா் பிரிவு நிா்வாகி முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.