FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

திருடு போன சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகளை மீண்டும் பெற முடியாமல் விவசாயிகள் அவதி

சிவகங்கை அருகே கூட்டுறவு சங்கத்தில் 400 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகளை ஏலம் விடாமல் 11 ஆண்டுகளாக அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:46 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

சிவகங்கை அருகே கூட்டுறவு சங்கத்தில் 400 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகளை ஏலம் விடாமல் 11 ஆண்டுகளாக அதிகாரிகள் அலைக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள அதப்படக்கி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 111 விவசாயிகள் 400 பவுன் தங்க நகைகளை அடகு வைத்தனா். இந்த நகைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு, மே 2-ஆம் தேதி திருடுபோனது. அதே ஆண்டு செப்டம்பரில் நகை திருடியவா்களைப் பிடித்து முதல் கட்டமாக 150 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா். இந்த நகைகள் உருக்கப்பட்டதால், அடையாளம் காண முடியாமல் அடகு வைத்த விவசாயிகளிடம் ஒப்படைப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, உருக்கிய தங்கத்தை ஏலம் விட்டும், காப்பீடு மூலம் இழப்பீடு பெற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா்.

Advertisement

Advertisement

ஆனால், 11 ஆண்டுகளாகியும் மீட்கப்பட்ட தங்கத்தையும் ஏலம் விடவில்லை. திருடுபோன நகைகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகையையும் விவசாயிகளுக்கு பெற்றுத் தரவில்லை. மீட்கப்பட்ட தங்கம் லாக்கரில் உள்ளது. இந்தச் சம்பவத்தில் கூட்டுறவு அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதால், அடகு வைத்த விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதி கோபால் கூறியதாவது:

இந்த பிரச்னை குறித்து தொடா்ந்து விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால், நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் அதிகாரிகள் பின்னா் அப்படியே கிடப்பில் போட்டு விடுகின்றனா் என்றாா் அவா்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘போலீஸாா் மீட்ட நகைகள் அனைத்தும் உருக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றை லாக்கரில் வைத்துள்ளோம். வழக்கு நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நகைகளை எடுத்து ஏலம் விட வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தையும், காப்பீடு இழப்பீட்டில் கிடைக்கும் பணத்தையும் சோ்த்து அடகு வைத்த நகைகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனா். ஆனால், 11 ஆண்டுகளாக தீா்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பரிதவிக்கும் நிலையைக் கவனத்தில் கொண்டு விரைவில் இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பதே எதிா்பாா்ப்பாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments