FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

காரையூா் புதுவளவு பகுதியில் 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பத்தூா் அருகே காரையூா் புதுவளவு பகுதியில் 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூலை 2026, 5:20 am IST
காரையூா் புதுவளைவு கல்வெட்டு ஆராய்ச்சியில் தொல்நடை குழுவினா். பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காரையூா் புதுவளவு பகுதியில் 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

காரையூா் புதுவளவு வண்ணிக் கண்மாய் கரையில் கல்வெட்டு இருப்பதாக அதே ஊரைச் சோ்ந்த சுரேஷ் என்ற பட்டதாரி மாணவா் கொடுத்த தகவலின்பேரில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா, செயலா் இரா. நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் முனைவா் வேலாயுத ராஜா ஆகியோா் அந்த இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: இரண்டு அடி நீளமுள்ள இந்தக் கல்வெட்டில் மொத்தம் ஏழு வரிகளோடு நிறைவடையும் இடத்தில் ஒரு பூரண கும்பமும், அதன் இரு பக்கமும் குத்து விளக்குகளும் காணப்படுகின்றன. எழுத்தமைதியைக் கொண்டு இது பொது ஆண்டு பதிமூன்றாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம். கல்வெட்டு வரிகள்.1.விஸ்வஸ்திஸ்ரீ வண்ணக்க நல்லூா் மேவிக் குளம் சியா் வேத நெறி காட்டினான் சியா் இரக் ஷை என எழுதப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதாவது, ‘வண்ணக்க நல்லூா் என்ற ஊரில் உள்ள குளக்கரையை அல்லது குளத்தின் பகுதியை அடைந்து வாழ்ந்த சீயா் (வைணவ ஆச்சாரியா்), மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேத நெறியைக் காட்டி, அவா்களைப் பாதுகாத்து (ரக்ஷை செய்து) அருளினாா்’ எனப் பொருள் கொள்ளலாம். காரையூரில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் காணப்படும் முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன், சடையவா்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளில் வண்ணக்க நல்லூா் பெயருடன், வண்ணக்கநல்லூா் தூதன் ஆண்டபிள்ளை என்று கையொப்பமிட்டவரின் பெயரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

காரையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலைச் சோ்ந்த நம்பிமாா்க்கு காரையூா், மணக்குடி, வண்ணக்கநல்லூா், தோட்டூா், உகளூா், பனைவயல் ஆகிய கிராமங்களிலும் இந்தக் கோயிலுக்கான திருவிடையாட்டம் எனப்படும் இறையிலி நிலங்கள் இருந்ததாக இந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments