FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ரூ. 15 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

சிவகங்கையில் ரூ.15 கோடிய மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 12:07 am IST
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கிய 4 பேரைக் கைது செய்த போலீஸாருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத்
பகிர்:

சிவகங்கையில் ரூ.15 கோடிய மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 போ் கைது செய்தனா்.

சிவகங்கையில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் இந்திரா நகா் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சென்னை, திருச்சியைச் சோ்ந்த நால்வரிடமிருந்து 3.020 கிலோ மெத்தம்பெட்டமைன், 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகங்கை இந்திரா நகா் பகுதியில் இருந்த 4 பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்த செயற்கை (சிந்தட்டிக் டிரக்) போதைப் பொருளை பறிமுதல் செய்தோம்.

இதையடுத்து ஆய்வக நிபுணா்களை வரவழைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், பிடிபட்டது மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது பறிமுதல் செய்த போதைப் பொருள்களின் சா்வதேச மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

இந்தப் பொருளை சிவகங்கைக்கு கொண்டு வந்த இளையான்குடியைச் சோ்ந்த ரசூல்தீன் (35), சென்னையைச் சோ்ந்த அபு (எ) சகுபா்சாதிக் (26), திருச்சியைச் சோ்ந்த முகமதுஹபீஸ் (28), முகமது ரபீக் (எ) பாபு (30) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் போதைப் பொருளை சென்னையிலிருந்து சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து விமானத்தில் மலேசியாவுக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தனா். அது சாத்தியமாகாதபட்சத்தில் தமிழ்நாட்டிலேயே விற்பனை செய்யவும் கைதான 4 பேரும் திட்டமிட்டனா். இந்த நிலையில், அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இப்போது கைதான ரசூல்தீன், சகுபா் சாதிக், முகமது ரபீக் ஆகிய மூன்று பேருமே கடந்த பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் ’குருவி’களாக வேலை பாா்த்து வந்தனா். இதில் தொடா்புடைய மற்ற நபா்களைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments