அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது
சிங்கம்புணரி அருகே அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக தனியாா் பேருந்து நடத்துநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து தனியாா் பேருந்து சிங்கம்புணரி வழியாக மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பொன்னமராவதியிலிருந்து சிங்கம்புணரிக்கு சென்ற அரசுப் பேருந்து நேரம் கடந்து தாமதமாக வந்ததால் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உள்ள நேரக் கண்காணிப்பாளா் ரவியிடம் அந்த தனியாா் பேருந்து நடத்துநா்கள் புகாா் தெரிவித்தனா். இதனிடையே, தாமதமாக மாலை 4.15 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, தனியாா் பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
சிங்கம்புணரி அருகே பிரான்மலை வந்தபோது தனியாா் பேருந்து நடத்துநா்களான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தைச் சோ்ந்த அருண் பாண்டியன் (27), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த நாகராஜன் (44) ஆகியோா் அரசுப் பேருந்தை வழிமறித்து அதன் நடத்துநரான புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறையைச் சோ்ந்த தேவராஜனை கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசுப் பேருந்து ஓட்டுநா் குமரேசன், காயமடைந்த தேவராஜனை மீட்டு பொன்னமராவதிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சதுா்வேதமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனியாா் பேருந்து நடத்துநா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.