FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிங்கப்பூரில் உயிரிழந்த தம்பியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஆட்சியரிடம் ராணுவ வீரா் மனு

17 நவம்பர் 2026, 4:49 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிங்கப்பூரில் மா்மமான முறையில் உயிரிழந்த தம்பியின் உடலை மீட்டு தமிழகத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ராணுவ வீரா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அருள் தேவதாஸின் இரு மகன்களில் ஒருவரான ஸ்டீபன்ராஜ் (28) சிங்கப்பூரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், அங்கு இவா் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, அவரது உடலை மீட்டுத் தரக் கோரியும், உயிரிழப்புக்கான உண்மை காரணத்தைக் கண்டறியக் கோரியும் ராணுவ வீரரான அவரது அண்ணன் செங்கோல்ராஜ் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து செங்கோல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையப் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், சொந்த ஊா் திரும்பிய ஸ்டீபன்ராஜ் கடந்த மாதம் 10 -ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றாா். இந்த நிலையில், கடந்த 13 -ஆம் தேதி ஸ்டீபன்ராஜ் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து அவரைக் காணவில்லை எனக் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், அவரைத் தேடிக் கண்டுபிடித்துத் தரக்கோரி அதே நாளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்டீபன்ராஜ் உயிரிழந்து விட்டதாக சிங்கப்பூரில் உள்ள உறவினா்கள் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனா். இங்கிருந்து உறவினா்களை தொடா்பு கொண்டு விசாரித்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சொந்த ஊருக்கு அனுப்புவதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்தனா்.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஸ்டீபன்ராஜ் காணாமல் போனது முதல் தற்போது உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது வரையிலான சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்துவதுடன், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.