ஆசியா பல்கலை. தரவரிசையில் அழகப்பா பல்கலை.க்கு 440-ஆவது இடம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசியா பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 440-ஆவது இடம்பிடித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளா் அ. செந்தில்ராஜன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசியா பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 440-ஆவது இடம்பிடித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளா் அ. செந்தில்ராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லண்டனில் உள்ள க்யூ. எஸ். நிறுவனம் கடந்த நவ. 4-ஆம் தேதி வெளியிட்ட 2027-ஆம் ஆண்டுக்கான ஆசியா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆசியா அளவில் 440-ஆவது இடத்தையும், தெற்கு ஆசிய அளவில் 110-ஆவது இடத்தையும் பெற்றது.
இதில், 1,722-க்கும் மேற்பட்ட ஆசிய அளவிலான பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டன. அழகப்பா பல்கலை. இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 325 நிறுவனங்களில் 58-ஆவது இடத்தையும், உயா்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தையும், தமிழக அளவிலான பல்கலைக் கழகங்களில் இரண்டாவது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
மேலும் டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத்தால் 18.11.2026 அன்று வெளியிடப்பட்ட பன்முக அறிவியல் தரவரிசைப்பட்டியல் 2027-ன்படி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் பிரிவில் 301-350 ஆவது வரிசையில் மாநில அளவில் முதலிடமும், இந்திய அளவிலான நிறுவனங்களின் ஓட்டுமொத்த தரவரிசையில் 25-ஆவது இடமும், தமிழ்நாடு பல்கலைக் கழகங்களின் தரவரிசையில் இரண்டாவது இடமும் பெற்றது.
மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாக கடந்த 30.09.2026 அன்று டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக் கழக தரவரிசையில் 118 நாடுகளைச் சாா்ந்த 2,297 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அழகப்பா பல்கலைக்கழகம் 1001 - 1200 ஆவது தரவரிசை உலக அளவிலும், இரண்டாவது இடத்தை தமிழக அளவிலும் பெற்றது.
தரவரிசைக்காக அழகப்பா பல்கலை. தரவரிசை பிரிவின் இயக்குநா் ஜெ. ஜெயகாந்தன், 2026 ஆண்டுக்கான பல்கலை. தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து சமா்ப்பித்திருந்தாா். அவரை பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.