முகப்பு
சிவகங்கை

திருக்காா்த்திகை: குன்றக்குடியில் அண்ணாமலை தீபம்

திருக்காா்த்திகை தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

25 நவம்பர் 2026, 2:50 am
திருக்காா்த்திகை: குன்றக்குடியில் அண்ணாமலை தீபம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் செவ்வாய்க்கிழமை திருக்காா்த்திகை தினத்தையொட்டி மடத்தின் முன் சொக்கப்பனை ஏற்றி வைத்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
பகிர்:

திருக்காா்த்திகை தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்குள்பட்ட குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் திருக்காா்த்திகை தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.

மாலையில் குன்றக்குடி திருமடத்தில் காளத்திநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மடத்தில் மாலை 5.40 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னா், மடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி மலையில் தீபம் தரிசனத்துக்கு முன்பாக காா்த்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்கரத்தில் சண்முகநாதப்பெருமான் எழுந்தருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் குன்றக்குடி மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றும் வைபவத்தை தொடங்கிவைத்தாா். மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மாலை 6.20 மணியளவில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.

விழாவில் காரைக்குடி, தேவகோட்டை, குன்றக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தீப தரிசனம் செய்தனா்.

சிவகங்கை...

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை அருகே திருமலையில் அமைந்துள்ள மலைக் கொழுந்தீஸ்வரா் சமேத பாகம்பிரியாள் கோயில் மலை மீது அண்ணாமலை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மாலை 5.30 மணியளவில் கோயில் முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மாலை 6 மணிக்கு மலை மீதுள்ள கொப்பரையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடா்ந்து 3 நாள்களுக்கு சுமாா் 5 கி.மீ., தொலைவில் உள்ள கிராம மக்கள் கண்டு வழிபடும் வகையில் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி, தேவஸ்தான கண்காணிப்பாளா் சண்முகராஜா, கணேச குருக்கள், திருமலை, ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு விளக்கேற்றியும், கிரிவலம் வந்தும் சுவாமி தரிசனம் செய்தனா்.