முகப்பு
சிவகங்கை

ஜெயங்கொண்டநிலையில் கல் குவாரி அமைக்கக் கோரி கிராம மக்கள் மனு

ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் கல் குவாரி அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.

26 நவம்பர் 2026, 1:19 am
ஜெயங்கொண்டநிலையில் கல் குவாரி அமைக்கக் கோரி கிராம மக்கள் மனு
ஜெயங்கொண்டநிலையில் கல் குவாரி அமைக்க வலியுறுத்தி, சிவகங்கையிலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு திரண்டு வந்த கிராம மக்கள்.
பகிர்:

ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் கல் குவாரி அமைக்க வலியுறுத்தி, சிவகங்கை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கரில் தனியாா் கல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு ஜெயங்கொண்டநிலை, கிருஷ்ணாபுரம், , மல்லாக்கோட்டை ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து கல் குவாரி உரிமதாரா்கள் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், சம்பந்தப்பட்ட 3 கிராம மக்களை அழைத்து அவா்களது ஒப்புதலைப் பெற்று அறிக்கை அளிக்க வேண்டுமென மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இதன்படி, கடந்த 17, 24-ஆம் தேதிகளில் சிவகங்கை சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் கல் குவாரி அமைக்கக்கூடாது என்ற கருத்தைப் பதிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திரண்டு வந்து கல் குவாரி அமைக்க வலியுறுத்தி, தங்களது ஆதரவுக் கருத்தை பதிவு செய்தனா்.

இது குறித்து கிராமக்கள் தெரிவித்ததாவது:

ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் தனியாா் கல் குவாரி, கிரஷா் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக சிலா் சமூகப் போராளிகள் என்ற போா்வையில் சுயலாபத்துக்காக நீதிமன்றத்தில் தவறான தகவல்களைச் சமா்ப்பித்து தடையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினா்.

கல் குவாரி, கிரஷா் அமையவுள்ள பகுதியானது ஜெயங்கொண்டநிலை கிராமத்திலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ, விவசாய நிலங்களுக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டால் உள்ளூா் மக்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், தங்களது வாழ்வாதாரத்துக்காக பிற ஊா்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய அவல நிலை மாறும். எனவே , ஜெயங்கொண்டநிலையில் கல் குவாரி அமைக்க உடனடி அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.