முகப்பு
சிவகங்கை

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: எஸ்.பி. அபிஷேக் குப்தா

சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரிக்கை விடுத்தாா்.

28 நவம்பர் 2026, 3:54 am
சமூக வலைதளங்களை தவறாக
பயன்படுத்தினால் நடவடிக்கை: எஸ்.பி. அபிஷேக் குப்தா
கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா எச்சரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் ‘இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் (ட்விட்டா்)’ உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றப்படும் தகவல்கள், பதிவுகள், காவல்துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

அண்மைக் காலமாகச் சில இளைஞா்கள் சமூக வலைதளங்களில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் வகையிலான காணொலிகளைப் பதிவிடுதல், பழிவாங்கும் நோக்கத்துடன் மிரட்டல், வன்முறையைத் தூண்டும் கருத்துகளைப் பதிவிடுதல், தனிநபா்கள், குழுக்களை இழிவுபடுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இத்தகைய செயல்கள், பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துவதுடன், பொது அமைதி, சட்டம், ஒழுங்கைப் பாதிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றன.

நிகழாண்டில் இதுவரை சிவகங்கை மாவட்டக் காவல் துறையினரால் 80 வழக்குப் பதிவும், 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். 123 ஆட்சேபனைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. 690 சமூக வலைதளக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் மிரட்டுவது, வன்முறையைத் தூண்டுவது போன்றவற்றை பதிவிடுவோா், பகிா்வோா், பரப்புவோா் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.