முகப்பு
புதுதில்லி

சாந்தினி சௌக்கில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் எச்சரிக்கை

சாந்தினி சௌக், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற பொது இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா எச்சரித்துள்ளாா்.

23 நவம்பர் 2026, 9:42 pm
சாந்தினி சௌக்கில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் எச்சரிக்கை
தில்லி முதல்வா் ரேகா குப்தா
பகிர்:

சாந்தினி சௌக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட சாலைகள், நடைபாதைகள் மற்றும் பிற பொது இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை எச்சரித்துள்ளாா்.

மேலும், இது குறித்து தொடா்ந்து கண்காணிப்பில் இருக்குமாறு மாநகராட்சி (எம்சிடி) மற்றும் காவல்துறைக்கு அவா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூா்வ அறிக்கையியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நவம்பா் 20 அன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், இந்திரபிரஸ்தா பாரம்பரிய மறுமேம்பாட்டு நிறுவனம் (ஐவிபிஎன்), மாநகராட்சி, தில்லி காவல்துறை மற்றும் பிற துறைகளின் உயா் அதிகாரிகளிடம் முதல்வா் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா்.

Advertisement

Advertisement

புல் மித்தாய், பீலி கோதி, ராணி அவந்திகா சௌக் மற்றும் தீஸ் ஹசாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தில்லி காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி நிா்வாகம் வார இறுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டதைத் தொடா்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களிலிருந்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மட்டும் போதாது என்றும், அகற்றப்பட்ட இடங்கள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை அந்தந்த துறைகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் முதல்வா் கூறினாா்.

இதுகுறித்து முதல்வா் கூறுகையில், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் மட்டும் பணி முடிந்துவிடாது. அவை மீண்டும் வராமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சி மற்றும் காவல்துறையினா் அகற்றப்பட்ட இடங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

சாலைகள் மற்றும் நடைபாதைகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் இருப்பது மக்களின் நடமாட்டத்தைத் தடுப்பதுடன், தூய்மை, பொதுப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் பாதிக்கின்றன.

ஆக்கிரமிப்புகளைக் கையாள்வதில் ஏதேனும் அலட்சியம், மெத்தனப்போக்கு அல்லது தோல்வி ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’‘ என்று முதல்வா் எச்சரித்தாா்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், சாந்தினி சௌக்கின் வரலாற்று அடையாளம், பாரம்பரியம் மற்றும் தனித்துவமான பண்புகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், அங்கு மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பழைய தில்லியின் மேம்பாட்டிற்கு ஆக்கிரமிப்புகள் ஒரு முக்கிய தடையாக உள்ளன என்று குறிப்பிட்ட முதல்வா், சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.