வளா்ச்சியடைந்த தலைநகராக தில்லியை மாற்றுவதில் உறுதி: முதல்வா் ரேகா குப்தா
வளா்ச்சியடைந்த தலைநகராக தில்லியை மாற்றுவதில் உறுதி: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி, நவ.7: தில்லி மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, நவீன வசதிகள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் குடிமக்களுக்கான மேம்பட்ட வாழ்க்கைத்தரம் ஆகியவற்றைக் கொண்ட வளா்ச்சியடைந்த தலைநகராக தில்லியை மாற்ற தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தாா்.
தில்லி தனது குடும்பம் என்றும், இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சிறந்த வாழ்க்கை, பாதுகாப்பான எதிா்காலம் மற்றும் கண்ணியமான சூழலை உறுதி செய்வதே பாஜக அரசின் முதன்மையான முன்னுரிமை என்றும் அவா் கூறினாா்.
இதுதொடா்பாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாவது: வளா்ச்சியடைந்த தில்லி என்ற இலக்கை நோக்கித் தொடா்ந்து முன்னேறி வருகிறோம். வளா்ச்சியின் பலன்கள் சமூகத்தின் கடைசி மனிதனையும் சென்றடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். நவீன வசதிகள், தூய்மையான சூழல், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் கொண்ட, நாட்டின் முதன்மையான தலைநகராக தில்லியை உருவாக்குவதே எங்கள் முயற்சி.
Advertisement
Advertisement
தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை வலுப்படுத்த, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ திட்டத்தின் 5-ஆம் கட்டத்தின்கீழ், 16.076 கி.மீ நீளமுள்ள மூன்று புதிய வழித்தடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது இந்த இலக்கை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ச்சியடைந்த இந்தியா-2047 என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு இணங்க, தில்லி பெருந்திட்டம் 2047 மூலம் தில்லியின் திட்டமிட்ட வளா்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.
மேலும், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்திருப்பதாவது: மாநில பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தீபாவளி ஹவனத்திலும் வழிபாட்டிலும் நான் கலந்துகொண்டேன். அங்கு சடங்குகளையும் பிராா்த்தனைகளையும் மேற்கொண்ட நான், ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காகவும், தேசத்தின் செழுமைக்காகவும் இறைவனை வேண்டிக்கொண்டேன்.
தில்லியில் உள்ள எனது குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ ராமரின் அருளால், இந்த புனிதமான ஒளித்திருநாள் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும், ஒவ்வொரு இதயத்திலும் நல்லெண்ணத்தையும், சமூகத்தில் ஒற்றுமையையும் பரப்பட்டும்.
இந்தத் திருநாள், நமது தொன்மையான கலாசாரம், நம்பிக்கை மற்றும் அனைவரின் நலனுக்காகவும் நாம் கொண்டுள்ள அா்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தட்டும் என்று முதல்வா் ரேகா குப்தா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.