தேவாரம் பெண் கொலையில் திருப்பம்: உறவினர் கைது
தேவாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவாரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவாரம் அமராவதி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சரணமணி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததால் சரணமணி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததுடன், கேரளாவில் உள்ள ஏலத் தோட்ட வேலைகளுக்கு சென்று வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களாக அவரை காணவில்லை. இதையடுத்து அவரது தங்கை கார்த்திகா செல்வி, தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சரணமணியை தேடி வந்தனர். அப்போது அவரது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் சரணமணி காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீஸார் ஆண்டிச்சாமி என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர்.
இதனிடையே சரணமணியின் செல்லிடப்பேசியைக் கைப்பற்றி விசாரித்தபோது அவர் அடிக்கடி அதே தெருவைச் சேர்ந்த அழகர் மகன் சடையாண்டி (38) என்பவருடன் பேசியது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்த போது சரணமணியை, அவர் கொலை செய்தது தெரியவந்தது. சடையாண்டி, சரணமணியின் தம்பி முறை கொண்ட உறவினர் ஆவார். இவர் சரணமணியிடம் சில லட்ச ரூபாயை பெற்றிருந்தாராம். இதை திரும்ப கேட்டதில் ஏற்பட்ட தகராறில் சுவற்றில் முட்ட வைத்தும், கழுத்தை நெரித்தும் சரணமணியை கொலை செய்து, பின்னர் அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை எடுத்துச் சென்று சங்கராபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் சடையாண்டி அடகு வைத்ததும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து சடையாண்டியை செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.