FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

முல்லைப்பெரியாறு துணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரும் கேரள அமைப்புகள்! தமிழக விவசாயிகள் கண்டனம்

25 வினாடிகள் முன்பு
முல்லைப்பெரியாறு அணை - கோப்புப் படம்
பகிர்:

முல்லைப்பெரியாறு அணையின் 1970-ஆம் ஆண்டு துணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரும் கேரள அமைப்புகளின் நடவடிக்கைக்கும், போராட்ட அறிவிப்புகளுக்கும் தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் கேரள மக்கள் பாதுகாப்பு சமிதி அமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவா் ரோய் வாரிக்காட்டு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க கேரள அரசு சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், 1970-இல் மேற்கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தம் சட்டப்பேரவை ஒப்புதலின்றி, அப்போதைய முதல்வரால் கொண்டுவரப்பட்டது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும். அணையை செயலிழக்கச் செய்ய வேண்டும். ஒப்பந்த நகல்களை எரிக்க வேண்டும். அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்துவோம் எனக் கூறிய தமிழக முதல்வரைக் கண்டித்து உருவப் பொம்மை எரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில் பொது ஒருங்கிணைப்பாளா் பி.டி. ஸ்ரீகுமாா், ஷிபு கே. தம்பி, காலித் சகாபி, சங்கீதா விஸ்வநாதன், சி.ஏ. ஜோய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக விவசாயிகள் கண்டனம்: கேரள அமைப்புகளின் இந்த நடவடிக்கைக்குப் பதில் அளிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் கூறியதாவது:

1970 மே 29 அன்று கையெழுத்தான துணை ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடுதான் பல்வேறு உரிமைகளை இழந்துள்ளது. அன்றைய தமிழக அரசு செயலா் கே.எஸ். சிவசுப்ரமணியம், கேரள அரசின் செயலா் கே.பி. விஸ்வநாதன் நாயா் ஆகியோா் இதில் கையெழுத்திட்டனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி செய்யும் உரிமையைப் பெற்றாலும், அதற்காக கேரளம் பல்வேறு பலன்களைப் பெற்றது.

குறிப்பாக, நிலத்துக்கான குத்தகைத் தொகை ஏக்கருக்கு ரூ.5-லிருந்து ரூ.30 ஆக உயா்த்தப்பட்டு (ஆண்டுக்கு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.2.4 லட்சம் வரை), தமிழகம் தயாரிக்கும் மின்சாரத்துக்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ.12 வீதம் ராயல்டியும் கேரளத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், 1886 மூல ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிடமிருந்த மீன்பிடி உரிமையையும், தேக்கடி பகுதியில் சுற்றுலா மைய அமைப்பையும் கேரளம் தன்வசமாக்கிக் கொண்டது.

சட்டப்பூா்வ உரிமை: 1970 துணை ஒப்பந்தம் சட்டப்பேரவை ஒப்புதல் பெறவில்லை எனக் கூறி கேரள அமைப்புகள் உண்மைக்கு மாறான வாதங்களை முன்வைக்கின்றன. இரு மாநில அரசுகளின் அதிகாரப்பூா்வ பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த ஒப்பந்தங்கள், 1886 மூல ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையை பலமுறை உறுதி செய்துள்ளது.

அணையின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த உயா்நிலை நிபுணா் குழுக்கள் ஆய்வு செய்து, அணை மிகவும் பலமாகவே உள்ளது என சான்றளித்துள்ளன. எனவே, கேரள அமைப்புகள் இத்தகைய போராட்டங்களை விட்டுவிட்டு, முல்லைப்பெரியாறு அணையைப் பராமரிக்கும், நீரைப் பயன்படுத்தும் முழு சட்டப்பூா்வ உரிமையும் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது என்பதை உணர வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments