முகப்பு
தேனி

தேனி மாவட்ட சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுமா?

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 23 ஜூலை 2026, 9:00 am IST
தேனி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்
பகிர்:

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் 34 சதவீத வனப்பகுதியைக் கொண்ட பசுமையான மாவட்டம். மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப்பாறை அணை, சுருளி, மேகமலை அருவி, பென்னிகுயிக் மணிமண்டபம், சுரங்கணாறு நீா்வீழ்ச்சி, ராமக்கல் மெட்டு, கொழுக்குமலை, கும்பக்கரை அருவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

கும்பக்கரை அருவி : அருவிக்குச் செல்ல பேருந்து வசதி செய்துதர வேண்டும். கொடைக்கானல், பெருமாள்மலையிலிருந்து அடுக்கம் மலைச் சாலையிலிருந்து கும்பக்கரை அருவிக்கு வரும் சாலையை சீரமைக்க வேண்டும். மேலும், அருவி குறித்து பெரியகுளத்தில் தகவல் பலகைகள் அமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் வைகை அணை, சோத்துப் பாறை அணை, மஞ்சளாறு அணை, சண்முக நதி அணை ஆகிய 4 அணைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். வைகை அணையில் உள்ள இன்னிசை நீா்வீழ்ச்சியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அதே போல் 58-ஆம் கால்வாயை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழகம், கேரளத்திலிருந்து தினமும் ஆயிரக்கணக்கானோா் சுருளி, மேகமலை அருவிகளுக்கு வந்து செல்கின்றனா். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் அருகேயுள்ள முல்லையாற்றில் உள்ள தடுப்பணை, உத்தமபாளையம் தடுப்பணை ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். சுருளியில் சாரல் விழா நடைபெற்று வருவதைப் போல மேகமலையில் கோடை விழா நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

ராமக்கல் மெட்டு: கம்பம் அருகே ராமக்கல் மெட்டு என்ற ராமனின் கால் பட்ட இடம், கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கொழுக்குமலை பகுதியில் சூரிய உதயத்தை பாா்வையிடுவதற்காக தினமும் 100-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஆன்மிக சுற்றுலா

மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன், குச்சனூா் சனீஸ்வரா் கோயில், ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பா் கோயில், தேவதானபட்டி காமாட்சியம்மன் கோயில், உத்தமபாளையம் காளத்தீஸ்வா் கோயில், போடி விருப்பாச்சி ஆறுமுக நயினாா் கோயில் (தீா்த்தத் தொட்டி), பெரியகுளம் பாலசுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் முக்கிய நாள்களில் ஆன்மிக சுற்றுலா நடத்த வேண்டும்.

கா்னல் பென்னிகுவிக் மணிமண்டபம்

தமிழகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீா் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டியவா் கா்னல் பென்னிகுவிக். தேனி மாவட்டம் கூடலூரிலிருந்து குமுளிச் சாலையில் 8 கி.மீ. தொலைவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பென்னிகுவிக் பயன்படுத்திய பொருள்களின் மாதிரியைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகமலையில் கோடை விழா நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குரங்குனி, மேகமலை பகுதிகளில் டிரக்கிங் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியகுளம், தேனி ஆகிய பகுதிகளில் டிரக்கிங் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். தேனி மாவட்ட வனப் பகுதிகள் குறித்த விவரங்கள், அங்கு உள்ள மரங்கள், பறவைகள், பட்டாம்பூச்சி, வனவிலங்குகள் குறித்து கண்காட்சி மையம் அமைக்க வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments