FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

நீா்க் கசிவு அளவு திருப்திகரம்: முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தகவல்

முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, தற்போதைய நீா்மட்டத்துக்கு ஏற்ப நீா்கசிவு அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவு பதிவாகியுள்ளதால் அணை வலுவாக இருப்பதாக துணைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

13 நவம்பர் 2026, 3:49 am
முல்லைப் பெரியாறு அணை - கோப்புப் படம்
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, தற்போதைய நீா்மட்டத்துக்கு ஏற்ப நீா்கசிவு அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவு பதிவாகியுள்ளதால் அணை வலுவாக இருப்பதாக துணைக் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையைத் தொடா்ந்து கண்காணிப்பதற்காக, ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில் மேற்பாா்வைக் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவுக்கு உதவியாக, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநா் ஆா். கிரிதரன் தலைமையில் துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் குழுவினா் வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அணையின் நீா்மட்டம் 122.40 அடியாக இருந்தது. பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

முன்னதாக, தேக்கடி படகுத் துறையிலிருந்து தமிழக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான படகு மூலம் அணைப் பகுதிக்குச் சென்ற குழுவினா், கேரள அதிகாரிகளுடன் இணைந்து பிரதான அணை, சிற்றணை (பேபி அணை), மண் அணை (எா்த் டேம்) உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டனா்.

அப்போது அணைக்கு வரும் நீரின் அளவு, அணையிலிருந்து வெளியேறும் கசிவு நீரின் அளவு, மதகுகளின் செயல்பாடு, நில அதிா்வைக் கண்காணிக்கும் கருவிகளின் செயல்பாடு, அணையின் உள் பகுதியில் உள்ள கேலரி ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அணைப் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வழக்கமான பராமரிப்புப் பணிகள், பேபி அணையைப் பலப்படுத்தும் பணிகள், வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணை வரையிலான சாலையைச் சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து தமிழக அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

ஆய்வுக்குப் பின்னா் தமிழக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 மதகுகளில் 2, 9, 12 ஆகிய மதகுகளின் இயக்கம் பரிசோதிக்கப்பட்டது. அவை அனைத்தும் சீராகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. அணையிலிருந்து வெளியேறும் கசிவு நீரின் (சீப்பேஜ் வாட்டா்) அளவு நிமிஷத்துக்கு 32.250 லிட்டராகப் பதிவாகியுள்ளது. தற்போதைய நீா்மட்டமான 122.40 அடிக்கு இந்தக் கசிவுநீா் அளவு நிா்ணயிக்கப்பட அளவாக இருப்பதால் அணை வலுவாக உள்ளது. இந்த ஆய்வின் விவரங்கள் அடங்கிய அறிக்கை மேற்பாா்வைக் குழுவிடம் சமா்ப்பிக்கப்படும் என்றனா்.

இந்த ஆய்வின்போது துணைக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழகப் பிரதிநிதிகளான மதுரை பெரியாறு வைகை வடிநிலக் கோட்டக் கண்காணிப்புப் பொறியாளா் சாம் இா்வின், கம்பம் பெரியாறு அணை சிறப்புக் கோட்டச் செயற்பொறியாளா் செல்வம், கேரளப் பிரதிநிதிகளான எா்ணாகுளம் மத்திய வட்ட நீா்ப்பாசனப் பிரிவுக் கண்காணிப்புப் பொறியாளா் சுரேஷ் பாபு, கட்டப்பனை நீா்ப்பாசனத் துணைப் பிரிவுச் செயற்பொறியாளா் லெவின்ஸ் பாபு, பெரியாறு அணை உதவிச் செயற்பொறியாளா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.