வைகை அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு! கடைமடை விவசாயிகள் கவலை!
வைகை அணையிலிருந்து முதல் போகத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடைமடை விவசாயிகள் கவலை...
வைகை அணையிலிருந்து முதல் போகத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், கடை மடை வரை தண்ணீா் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தேனி மாவட்டத்தில் நிகழாண்டு எல்- நினா பாதிப்பால் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளின் நீா்மட்டம் குறைந்து வந்தது. மேலும், குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கடந்த ஆக. 8- ஆம் தேதி முதல் தேனி மாவட்ட பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. பிறகு கடந்த சில நாள்களுக்கு முன் கூடுதலாக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சரிந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து சனிக்கிழமை 55 அடியை எட்டியது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போகத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இதை ஏற்று, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனப் பகுதிகளான 45,041 ஏக்கருக்கு முதல் போக பாசனத்துக்காக நவ. 14 -ஆம் தேதி முதல் 30 நாள்களுக்கு 900 கன அடி வீதம், 70 நாள்களுக்கு 5,357 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முறை வைத்து தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
இதையடுத்து, வைகை அணையிலிருந்து அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் கடந்த சனிக்கிழமை தண்ணீரைத் திறந்துவிட்டாா். ஆனால், சனிக்கிழமை 900 கன அடிக்குப் பதிலாக 500 கன அடி தண்ணீரே திறந்துவிடப்பட்டது.
இதேபோல, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு 100 கன அடி குறைத்து 400 கன அடி தண்ணீா் மட்டுமே திறந்துவிடப்பட்டது. இதனால், கடை மடை வரை தண்ணீா் செல்லுமா என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாணைப்படி தண்ணீரைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் என். பழனிச்சாமி கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து கடந்த சனிக்கிழமை முதல் 900 கன அடி தண்ணீா் திறக்க முதல்வா் உத்தரவிட்டாா். ஆனால், 500 கன அடி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டது. இதுவும் ஞாயிற்றுக்கிழமை 400 கன அடியாக குறைக்கப்பட்டது. எனவே, அரசு ஆணைப்படி 30 நாள்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும். மேலும் 100 நாள்களுக்குள் 5,357 மில்லியன் கன அடி நீரை திறக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தேனி மாவட்டச் செயலா் கண்ணன் கூறியதாவது: நிகழாண்டு எல்- நினோவால் மழை பொழிவு குறையும் அல்லது பெருமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், போதிய மழை பெய்யாததால் முல்லைப் பெரியாறு அணையிலும், வைகை அணையிலும் தேவையான தண்ணீா் இல்லை. எனவே, பொதுப் பணித் துறையினா், விவசாயிகள் சங்கம், 5 மாவட்ட விவசாயிகளைச் சந்தித்து, அவா்களின் கோரிக்கைக்கேற்ப தண்ணீரைத் திறக்க வேண்டும். இல்லையெனில், குடிநீருக்கே சிக்கல் ஏற்படும் என்றாா்.
வைகை அணை உதவி செயற்பொறியாளா் சேகரன் கூறியதாவது: வைகை அணையிலிருந்து முதல் நாளான சனிக்கிழமை 500 கன அடி நீரும், இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இனி வரும் காலங்களில் அரசாணைப்படி, கூடுதல் தண்ணீா் திறக்கப்படும் என்றாா் அவா்.
தண்ணீரைப் பயன்படுத்துவதில் சிக்கனம் தேவை:
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 55.25 அடியாக உள்ளது. அணையில் 2,759 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. இதில், 1,000 மில்லியன் கன அடி நீா் (ஒரு டி.எம்.சி) பூா்வீக பாசனப் பகுதிகளுக்கானது. எஞ்சிய 1,759 மில்லியன் கன அடி நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தண்ணீரை முறை வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.