வைகை அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு!
வைகை அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது பற்றி..
விவசாயிகள் வைத்தக் கோரிக்கையை ஏற்று, வைகை அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார் தமிழக அமைச்சர் நிர்மல் குமார்.
பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் 30 நாள்களுக்கு முழுமையாகவும், 70 நாள்களுக்கு முறை வைத்தும், மொத்தம் 100 நாள்களுக்கு 5,357 மில்லியன் க அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து இன்று முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, வைகை அணையிலிருந்து மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், இன்று காலை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் முதல்போக பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
முதல்போகப் பாசனத்துக்காக தொடர்ந்து 100 நாள்கள் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின், பாசனத்துக்காக வைகை அணை திறந்துவைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழை பெய்தால், தொடர்ந்து 100 நாள்களும் அணை திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.