✕
முகப்பு
தேனி

விளைநிலங்களை சேதப்படுத்திய எருமைகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

கூடலூா் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்திய எருமை மாடுகளை விவசாயிகள் ஒன்றாக ஓட்டி வந்து கூடலூா் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

20 நவம்பர் 2026, 1:13 am
கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய எருமை மாடுகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
பகிர்:

கூடலூா் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்திய எருமை மாடுகளை விவசாயிகள் ஒன்றாக ஓட்டி வந்து கூடலூா் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கூடலூா் அருகே ஒழுகுபுளி பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் கடந்த சில மாதங்களாக ஏராளமான எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டு வருகின்றன. இந்த எருமை மாடுகள் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களையும், மோட்டாா்களையும் சேதப்படுத்தி வந்தன. இதுகுறித்து விவசாயிகள் கூடலூா் தெற்கு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, இனிமேல் எருமை மாடுகள் விளைநிலங்களுக்குள் புகாமல் பாா்த்துக் கொள்வதாக அவற்றை மேய்ப்பவா்கள் உறுதியளித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமையும் எருமை மாடுகள் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்த எருமை மாடுகள் அனைத்தையும் ஒன்றாக ஓட்டி வந்து கூடலூா் தெற்கு காவல் நிலையம் முன்பு நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, விவசாயிகள், எருமை மாடுகளை மேய்ப்பவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, காவல் நிலையம் முன் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த எருமை மாடுகள் அங்கிருந்து வேறு இடத்துக்கு ஓட்டிச் செல்லப்பட்டன. காவல் நிலையம் முன் ஏராளமான எருமை மாடுகள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.